PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை: கடலுார்
மாவட்டம், மங்களூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்ற விவசாயியை விஷப்பாம்பு
கடித்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து
செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால், செந்தில்
இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. விவசாயி உயிரிழப்புக்கு, தி.மு.க.,
அரசின் அலட்சியமும், மெத்தன போக்கும்தான் காரணம். மக்கள் நல்வாழ்வு துறை,
மக்கள் கெடுவாழ்வு துறையாக மாறியுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறையின்
அமைச்சர் சுப்பிரமணியனுக்கு முதல்வருடன், 'வாக்கிங்' போகவும், மாரத்தான்
ஓடவும் தான் நேரம் இருக்குது போலும்!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: 'தமிழகத்தில் பீஹார் மக்கள், தி.மு.க.,வினரால் துன்புறுத்தப்படுகின்றனர்' என்ற பிரதமர் மோடியின் பேச்சை முதல்வர் ஸ்டாலின் திரித்து, ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியதாக அவதுாறு பரப்பி, நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் நடத்துவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
'ஓரணியில் தமிழகம்' என்ற பெயர்ல, தி.மு.க.,வுக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால, 8 கோடி தமிழர்களும் தி.மு.க.,வுல சேர்ந்திருப்பாங்கன்னு முதல்வர் நினைச்சுட்டாரோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவல், கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், 15,796 பேர் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுவில் இருந்து பாதுகாத்து கொள்ள கொசு விரட்டிகளையும், கொசுவலைகளையும் பயன்படுத்த வேண்டும். கொசு அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
சுகாதாரத்துறை மீது பழி போடாம, மக்கள் தான் தங்களை தற்காத்துக்கணும் என்பது போல பேசுறாரே... எல்லாம் கூட்டணி பேச்சு செய்யும் மாயம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும், சட்டத்திற்கு புறம்பான முறையில் பெயர்களை நீக்கவும், சேர்க்கவும், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு முடியும் வரை, தமிழகத்தில் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, கட்சிகள் மேற்பார்வையில் தானே தேர்தல் கமிஷன் செய்ய இருக்கு... அப்புறமும் ஏன் பயப்படுறாங்க?

