PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: 'கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், வட மாநிலத்தவர்
பல ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்; இது ஏற்புடையதல்ல. கிருஷ்ணகிரி,
தர்மபுரி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த, 90 சதவீதம் பேருக்கு
வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்' என சட்டசபையில் பேசினேன். அப்போது, தொழில்
துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, 'உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை
உறுதி செய்வோம்' என்றார். ஆனால், இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தி.மு.க., அரசு நிறைவேற்றாமல் விட்ட வாக்குறுதிகளின்வரிசையில் இதுவும்
ஒன்று; அவ்வளவு தான்!
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பீஹார் மாநில தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் தவறில்லை. தமிழக மக்கள், வெளி மாநிலங்களில் வாக்காளர்களாக உள்ளனர்; தேர்தலில் போட்டியிட்டும் வெற்றி பெறுகின்றனர். நிபந்தனைகள் விதித்து, வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும்.
இப்படி, வட மாநில தொழி லாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால், அவங்களாவது தன் கட்சிக்கு ஓட்டு போடுவாங்கன்னு நினைக்கிறாரோ?
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேட்டி: வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பத்தில், எந்த குளறுபடியும் இல்லை. 2002ல் வாக்காளர் பட்டியலில் குடும்பத்தில் ஒருவர் இருந்தாலே, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தவறில்லாமல் எழுதிக் கொடுத்து, போட்டோ ஒட்டி வாக்காளராக சேர்ந்து கொள்ளலாம். அதிகாரிகளும் உதவுகின்றனர்; கட்சியினரும் உதவுகின்றனர். தகுதியுள்ளவர்களை சேர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவரது தலைவர் ஸ்டாலின், 'வாக்காளர் திருத்த பட்டியல் விண்ணப்பத்தில் குழப்பமோ குழப்பம்'னு குற்றஞ்சாட்டுறாரு... அமலாக்கத் துறைக்கு பயந்து இவர், 'சேம்சைடு கோல்' போடுறாரோ?
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன், கூட்டணி குறித்து காங்., சார்பில் அதிகாரபூர்வமாக யாரும் பேசவில்லை. தி.மு.க., கூட்டணியில் வலிமையாகவும், உறுதியாகவும் காங்., உள்ளது. கூட்டணி குறித்து, காங்., மூத்த தலைவர் ராகுல், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அல்லது தமிழக பொறுப்பாளர்கள் தான் கூற வேண்டும்.
'விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே மாட்டோம்'னு அடிச்சு சொல்லாம, இவர் பூசி மெழுகுவதை பார்த்தால், அதிகாரபூர்வமற்ற முறையில் ஏதோ நடக்குது போலும்!

