PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பேச்சு: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் எல்லா துறைகளும் மிகப்பெரிய மாற்றமும், ஏற்றமும் கண்டு வருகிறது. ஒவ்வொரு திட்டங்களும், நடவடிக்கைகளும் தமிழகத்தைக் கடந்து பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக்கூடிய, பாராட்டக்கூடிய அளவில் உள்ளன. சில திட்டங்கள் நாடு கடந்தும் பாராட்டு பெற்று வருகிறது.எது... மூன்று முறை மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தியதும், பஸ் கட்டணத்தை உயர்த்த ஆணையம் அமைக்கிறதுமா?
அ.தி.மு.க., மருத்துவர் அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: குரங்கு அம்மை நோயால், 15 நாடுகளில், 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில், 800 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் எப்படி எச்சரித்ததோ, அதேபோல, குரங்கு அம்மை நோய்க்கு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. இந்த நோய் எல்லையை கடந்து விட்டது. தி.மு.க., அரசு கும்பகர்ணனை போல துாங்காமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தாக்கம் மறைந்து இப்ப தான் மக்கள் நிம்மதியா மூச்சு விடுறாங்க... அதுக்குள்ள இன்னொன்னுனா தாங்க முடியாது!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: அத்திக்கடவு திட்டம், தி.மு.க., ஆட்சியில் பல்வேறு காரணங்களால் தடைபட்டு நின்ற போது, என் தலைமையில் தொடர் உண்ணாவிரதம் நடக்கும் என்றும், அதை அண்ணாமலை துவக்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதை போட்டி அரசியலாக எடுத்துக் கொள்ளாமல், திட்டத்தின் பயனை உணர்ந்த அமைச்சர் முத்துசாமி, முதல்வர் ஸ்டாலினிடம் பேசி, போர்க்கால அடிப்படையில் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். எலியும், பூனையுமா இருந்தவங்க ஒட்டி, உறவாடுறதை பார்த்தால், சட்டசபை தேர்தலுக்கு கூட்டணியே சேர்ந்துடுவாங்களோ?
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: கோல்கட்டா அரசுமருத்துவமனையில் பெண் மருத்துவர் வன்கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பங்கேற்றார். மேற்கு வங்க உள்துறை அமைச்சர், மருத்துவத் துறை அமைச்சருக்கு எதிராக மம்தா போராட்டம் நடத்துகிறாரா? இந்த இரண்டு துறைகளையும் கவனிப்பது மம்தா தானே.காங்கிரஸ், தி.மு.க.,வின் கூட்டாளியா இருக்காங்களே... அவங்க வித்தையில் பாதியை கூடவா காட்ட மாட்டாங்க?

