PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM

கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை மீண்டும்
மோடி தான் பிரதமர் என்பது உறுதியாகி விட்டது. தேர்தல் முடிவுகள் தெரிந்த
பிறகு, நடக்கும் தேர்தல் இது. தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பர்.
ரொம்ப
சந்தோஷம்... அப்படின்னா கேரளாவின் வயநாட்டில் ராகுல் களமிறங்கியதை போல,
நம்ம தமிழகத்தின் கரூரிலோ, கன்னியாகுமரியிலோ பிரதமர் மோடி
போட்டியிட்டிருக்கலாமே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கும் வரலாம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதாவது, சட்டம் -- ஒழுங்கு சீரடையும். அமைதி நிலவும். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதி கிடைக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். சுற்றுலா துறை மேம்படும். பயங்கரவாதம் ஒடுக்கப்படும். தமிழகத்திற்கு அந்த நிலைமை வரக்கூடாது என்கிறீர்களா?
அதெல்லாம் சரி... இவ்வளவு நல்ல விஷயங்களை செய்துட்டு, காஷ்மீர்ல ஏன் சட்டசபை தேர்தலை நடத்தாம இருக்கீங்க?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை: பொன்முடி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் காவலனாக இருந்து, தக்க சமயத்தில் தலையிட்டு, ஜனநாயகத்தை காத்தமைக்காக நன்றி தெரிவிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அப்படியானால் நீட் தேர்வு விஷயத்தில், மாணவர்களின் நலனுக்காக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மட்டும் எதிர்ப்பது ஏன்? தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், வழங்கப்பட்ட நீதி அற்புதமானது என்பதும், எதிராக தீர்ப்பு வந்தால், வாங்கப்பட்ட நீதி, எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என விமர்சிப்பதும் தான், திராவிட மாடல் தலைவர்களின்திருவிளையாடல் பேச்சு.
'உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளி சட்னி' என்ற கதை தான்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கிசான் விகாஸ் பத்ரா, கிரிஷி விக்யான் கேந்திரா, பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் திட்டம், பசல் பீமா யோஜன் போன்ற பா.ஜ., அரசு திட்டங்களின் பெயர்களை உச்சரிக்க பயந்து தான், பழனிசாமி கூட்டணியை முறித்திருப்பார்.
நீங்க இப்படி சொல்றீங்க... அவரோட சகாக்கள், 'இந்த திட்டங்களின் பெயரை தமிழில் மாற்றி அமைக்க எங்க தலைவரால தான் முடியும்'னு சொல்வாங்களே!

