/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'டெண்டர்' தராத அமைச்சர் மீது தி.மு.க.,வினர் அதிருப்தி!
/
'டெண்டர்' தராத அமைச்சர் மீது தி.மு.க.,வினர் அதிருப்தி!
'டெண்டர்' தராத அமைச்சர் மீது தி.மு.க.,வினர் அதிருப்தி!
'டெண்டர்' தராத அமைச்சர் மீது தி.மு.க.,வினர் அதிருப்தி!
PUBLISHED ON : டிச 27, 2025 03:11 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, “இடம் கிடைக்க விடாம தடுத்துடறாங்க பா...” என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய், வேலுார்ல பிரசாரம் செய்றதுக்கு, பல இடங்களை அந்த கட்சியினர் தேடிட்டு இருக்காங்க பா...
“அணைக்கட்டு தொகுதியில் இருக்கிற இறைவன்காடு என்ற பகுதியில், 25 ஏக்கர் காலி இடத்தின் உரிமையாளரிடம், த.வெ.க.,வினர் பேசியிருக்காங்க... இதை கேள்விப்பட்ட வேலுார் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நந்தகுமார், அந்த இடத்தின் உரிமையாளரை மிரட்டியதால, அவர் இடம் தர மறுத்துட்டாராம்...
''த.வெ.க.,வினர் எந்த இடத்தை பார்த்தாலும், அந்த இடத்தின் உரிமையாளர்களை, தி.மு.க.,வினர் மிரட்டி, தடுத்துடுறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“பிரமாண்ட அசைவ விருந்து குடுத்து அசத்திட்டாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்காரு... அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரான செல்லுார் ராஜு, எம்.எல்.ஏ.,வா இருக்கும் மதுரை மேற்கு தொகுதி பொறுப்பை, மூர்த்தியிடம் தலைமை குடுத்துடுச்சுங்க...
“இந்த தொகுதியில் இருக்கிற, 150க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகளை, சமீபத்தில் தனியார் திருமண மண்டபத்துக்கு கூப்பிட்டு, அவங்க கோரிக்கைகளை மூர்த்தி கேட்டிருக்காரு... 'அவற்றை எல்லாம் சீக்கிரமா செய்து குடுங்க'ன்னு, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்காருங்க...
“நிகழ்ச்சி முடிஞ்சதும், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன், மீன், நண்டுன்னு விதவிதமான அசைவ விருந்தும் குடுத்து அசத்தியிருக்காரு... மூர்த்தியின் அதிரடியை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம, செல்லுார் ராஜு கவலையில் இருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“தேர்தல்ல பாடம் புகட்ட காத்திருக்காவ வே...” என, கடைசி தகவலுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
“யாருக்கு ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“திருச்சிக்கு பக்கத்துல இருக்கிற மாவட் டத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு, மச்சான் ஒருத்தர் இருக்காரு... மாவட்டத்தில், எந்த அரசு டெண்டர் பணிகளா இருந்தாலும், மச்சானுக்கும், அவர் கை காட்டுறவங்களுக்கும் தான் அதிகாரிகள் குடுக்காவ வே...
“ஆளும் கட்சி ஒப்பந்ததாரர்கள், அமைச்சரிடம் போய் டெண்டர் பணிகளை கேட்டாலும், 'அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராதுப்பா'ன்னு சொல்லி அனுப்பிடுதாரு... இதனால அவங்க எல்லாம், 'அ.தி.மு.க., ஆட்சியில கூட டெண்டர்கள் எடுத்து, நாலு காசு பார்த்தோம்... நம்ம கட்சி ஆட்சியில இருந்தும், அமைச்சர் ஓரங்கட்டுதாரே'ன்னு புலம்புதாவ வே...
“அதோட, 'தேர்தல் வருதுல்லா... மச்சான் தயவுல மட்டும் அமைச்சரால ஜெயிச்சிட முடியுமா... நம்மகிட்ட வந்துதானே ஆகணும்... அப்ப கவனிச்சிக்கிடுதோம்'னும் கோபமா சொல்லுதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “மெய்யநாதன்... மலையரசன்கிட்ட பேசிட்டீரா ஓய்...” என்றபடியே நடக்க, மற்றவர்களு ம் கிளம்பினர்.

