PUBLISHED ON : மார் 29, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வாரிசு
அரசியலுக்கு எதிராக தி.மு.க.,வை விட்டு வெளியேறினார் வைகோ. அவருக்கு ஆதரவாக
பலர் தீக்குளித்து உயிர்நீத்த சோகங்கள் நிகழ்ந்தன. அவை மறைந்து, தற்போது
அதே வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிராக ம.தி.மு.க., எம்.பி., கணேச
மூர்த்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் வாரிசு அரசியலின்
கோரமுகம்.
இதைத்தான், 'வரலாறு திரும்பும்'னு அப்பவே சொல்லி வச்சாங்களோ?
ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா பேட்டி: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி, திருச்சியில் துரை வைகோ பிரசாரம் செய்யும் போது, கடந்த தேர்தலில் திருநாவுக்கரசர் பெற்றதை விட கூடுதல் ஓட்டு வாங்கி வெற்றி பெறுவார்.
ஆனா, கடந்த சட்டசபை தேர்தலப்ப தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை, திருச்சி வாக்கா ளர்கள் கண்ணில் நிழலாடுமே!
தமிழக குத்துச்சண்டை சங்கத்தின் தலைவரான, காங்., பிரமுகர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் அறிக்கை: மயிலாடுதுறை தொகுதியில், கட்சிக்காக உழைத்த உள்ளூர்காரர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய அரசியலில் காங்கிரஸ் அழிவு பாதையை நோக்கி செல்வது வருந்தத்தக்கது. வேட்பாளர்கள் தேர்வில் மாநில தேர்தல் குழு, ஸ்கிரீனிங் கமிட்டி, மத்திய தேர்தல் குழு எப்படி தேர்வு முறையை கையாண்டன என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.
தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியை இவர் வெளிப்படுத்துவது பகிரங்கமா தெரியுது!
அ.தி.மு.க., -- எம்.ஜி.ஆர்., இளைஞரணி முன்னாள் துணைச் செயலர் கே.சீனிராஜ் பேச்சு: திருச்சியில் நடந்த அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம், லோக்சபா தேர்தல் வெற்றிக்கு மட்டுமல்ல, சட்டசபை தேர்தலிலும் அடுத்த முதல்வராக பழனிசாமியை அரியணையில் ஏற்றுவதற்குரிய அச்சாரமாக அமைந்து விட்டது. மத்தியில், 10 ஆண்டு கால ஆட்சிக்கான எதிர்ப்பு ஓட்டுகளும், தமிழகத்தின் மூன்று ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக திரும்பும் எதிர்ப்பு ஓட்டுகளையும் அ.தி.மு.க., அறுவடை செய்து, தேர்தல் வெற்றியை உறுதி செய்யும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஓட்டுகள் தான், அ.தி.மு.க.,வை கரை சேர்க்குமா... அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா ஓட்டு போட யாருமே இல்லையா?

