PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா பேச்சு: இன்னும் 10
நாட்கள் நீங்கள் எதற்கும் பயப்படாமல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு
இடத்திற்கு போகும் போது நாங்கள் ஜெயித்து விடுவோம் என்று பயந்து பிரதமரை
திட்டுகின்றனர். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி ஆட்சி அமைப்பார் என்பது
எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், இங்குள்ளவர்கள் இதெல்லாம் ஒரு மாயை என
கூறுகின்றனர். அப்படியெல்லாம் மோடிக்கு எங்கும் எதிர்ப்பு கிடையாது.
இவங்க சொல்றதை பார்த்தால், விருதுநகரில், 'அமோக வரவேற்பு'க்கு நடுவுல தான் பிரசாரம் பண்றாங்களோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: நீட், ஜி.எஸ்.டி., தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றை கொண்டு வந்து அமல்படுத்தியதே மத்திய காங்கிரஸ் ஆட்சி தான். செய்வதையும் செய்துவிட்டு, செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் தான், காங்கிரசின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. பொழுது போன பிறகு, சூரிய நமஸ்காரம் செய்யும் செயல் தான் இது.
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'னு மாறிட்ட காங்கிரஸ், பரிகாரம் தேடுற மாதிரி தானே தேர்தல் அறிக்கை தயாரிக்க முடியும்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: தர்மபுரியில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், 'சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' என, கேட்டார். அப்படியானால், தி.மு.க., - பாஜ.,வுடன் கூட்டணி வைத்த போது சமூக நீதி தெரியவில்லையா? சமூக நீதியை தொடர்ந்து வலியுறுத்தியவர் ராமதாஸ் மட்டும் தான்.
அப்ப பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர்களுக்கு இவர் ஆதரவு தெரிவிக்கலாமே!
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: இந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று விட்டால், மக்களாட்சி முறையை ஒழித்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து, தான் ஜனாதிபதி ஆகலாம் என்று மனப்பால் குடிக்கிறார் மோடி. திராவிடம் இருக்கும் வரை அது நடக்காது. நான் தி.மு.க.,வில் இருந்து வெளியேறி இருந்தாலும், மீண்டும் குடும்பத்தில் இணைந்துள்ளேன். இன்று இந்தியாவுக்கே வழிகாட்டும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்.
அதெல்லாம் இருக்கட்டும்... இந்த தேர்தலில் இவரது மகன் மட்டும் ஜெயிக்கா விட்டால், இனி அந்த ஒரு சீட்டும் கூட இவர் கட்சிக்கு கிடைக்காது!

