PUBLISHED ON : ஏப் 19, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் பேச்சு: எம்.ஜி.ஆர்.,
தொண்டனுக்கு தந்த உரிமை, தொண்டர்கள் கூடி ஜெயலலிதாவுக்கு தந்த நிரந்தர
பொதுச்செயலர் இருக்கை, ஜெயலலிதா அடையாளம் காட்டிய பன்னீர்செல்வத்துக்கான
நீதி ஆகியவற்றோடு ராமநாதபுரத்து மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி என,
ஒரு ஓட்டில் நான்கு தீர்வு. இது சேதுக்கரை மக்களுக்கு, காலமும், கடவுளும்
தந்திருக்கும் கற்கண்டு வாய்ப்பு.
ராமநாதபுரம் மக்களின் தீர்ப்பு கற்கண்டா இனிக்குமா, கருவண்டா கடிக்குமான்னு தேர்தல் முடிவு தான் தீர்மானிக்கும்!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேச்சு: பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், வேட்பாளர் ஈஸ்வரசாமி 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த சட்டசபை தேர்தலில் இதேபோல வந்து ஓட்டு கேட்டேன். நீங்கள் எனக்கு அல்வா கொடுத்து விட்டீர்கள். ஆனால், மோடி வெற்றி பெற்றால், வடை தான் சுடுவார்.
நீங்க கூடத்தான் பல வாக்குறுதிகளை தந்துட்டு, வாக்காளர்களுக்கு, 'அல்வா' குடுத்தீங்க... அதை யாராவது சுட்டிக்காட்டினா என்னாகும்?
அ.தி.மு.க., மாநில இலக்கிய அணி துணை செயலர் பட்டுக்கோட்டை சின்னசுவாமிநாதன் பேச்சு: 'தேர்தலுக்கு பின் அ.தி.மு.க., தினகரன் வசமாகும்' என, அண்ணாமலை பேசியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எம்.ஜி. ஆர்.,ஜெயலலிதாவுக்கு பின், பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, சசிகலா குடும்ப ஆதிக்கத்தில் இருந்து அ.தி.மு.க.,வை காப்பாற்றினார். தி.மு.க.,வை தீவிரமாக எதிர்த்து வருகிறார். அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்ய துடிக்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மறுத்தார். அதனால், பழனிசாமியை தலைவராக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.
பா.ஜ.,விடம் இருந்து அ.தி.மு.க.,வை காப்பாத்துறேன்னு, தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்காம பார்த்துக்கிடுங்க!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: பாரதத்தின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை இலக்காக வைத்து, பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வரும் பா.ஜ., தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை யாரும் பெறாத வெற்றியை, பா.ஜ., பெறும்.
வாக்காளர்கள் இரண்டு நிமிட நுாடுல்ஸ் மாதிரி உடனடி இலவசங்களை தானே எதிர்பார்க்குறாங்க... இவங்களது 25 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் எடுபடுமா என்பது, ஜூன் 4ல் தான் தெரியும்!

