PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

திரைப்பட நடிகர் விஷால் பேச்சு: லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க
சைக்கிளில் சென்றேன். இதற்கு காரணம், சத்தியமாக என்னிடம் வாகனம் இல்லை.
அப்பா, அம்மாவுக்கு ஒரு வாகனம் இருக்கிறது. மற்ற வாகனங்களை விற்று
விட்டேன். இன்று சாலைகள் இருக்கும் தரத்தில் ஆண்டிற்கு மூன்று முறை
வாகனங்களை மாற்ற காசு இல்லை. போக்குவரத்து நெருக்கடியிலும் சைக்கிளில்
சீக்கிரமாக சென்று விடுவேன். சைக்கிளில் செல்வது உடலுக்கு மட்டுமின்றி
மனதுக்கும் நல்லது.
'பொய் பேசலாம்... ஆனா, ஏக்கர் கணக்குல பேசக்கூடாது'னு ஒரு படத்துல கவுண்டமணி காமெடி வசனம் பேசியது தான் இப்ப ஞாபகத்துக்கு வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மேகதாது அணை கட்டுவதே லட்சியம் என்கின்றனர். இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி பிரச்னை குறித்தே ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்துகிறார்.
தன் மகன் மீண்டும் எம்.பி., யாகும் வரை காட்பாடி விவகாரத்துல மட்டும் தான் அவர் கவனம் செலுத்துவார்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சனாதன தர்மத்தை அழிப்பேன் எனக்கூறிய உதயநிதியை விமர்சிக்காதவர்கள், நாட்டின் சொத்து மீது முஸ்லிம்களுக்கே முன்னுரிமை எனக் கூறிய மன்மோகன் சிங்கை கண்டிக்காதவர்கள், 15 நிமிடம் காவல்துறை ஒதுங்கிக் கொண்டால், நாட்டில் உள்ள 100 கோடி ஹிந்துக்களை அழித்து விடுகிறேன் எனக் கூறிய ஒவைஸியை கண்டிக்க முடியாதவர்கள், இதை சுட்டிக்காட்டிய மோடியை விமர்சிக்கின்றனர். இதற்கு காரணம் பா.ஜ., ஆட்சியில் உள்ள ஜனநாயகம்.
இரு மாநில முதல்வர்கள், சில அமைச்சர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனரே... பா.ஜ., ஆட்சியின் ஜனநாயகத்தை பற்றி தனியா வேற சொல்லணுமா?
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: சொந்த ஊருக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ், ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், அவ்வளவு செலவழித்து ஓட்டு போடணுமா என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். சென்னை போன்ற மாநகரங்களில் இருப்பவர்கள் பெருமளவில் ஓட்டளிக்க விரும்பாதது வேதனை அளிக்கிறது.
தேர்தல் முடிவு வர்றதுக்கு முன்னாடியே எதுக்கோ காரணம் கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கே... விருதுநகர்ல தம்பி விஜய பிரபாகரன் தேறுவாரா...?

