PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
'அ.தி.மு.க.,
நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை' என, பழனிசாமி
கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர், தன் விசுவாச வரலாற்றை ஒரு முறை
வருங்கால தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும். தங்கத்தை தரம் பார்த்து
சொல்லும் தகுதி உரைகல்லுக்கு தான் உண்டே தவிர, அவரை போன்றவருக்கு கிடையாது.
இவரது
தலைவர் பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் அமர வைத்த சசிகலாவுக்கு
எதிராகவே, அவர் தர்மயுத்தம் நடத்தினாரே... அதுக்கு பெயர் என்னவாம்?
தி.மு.க., செய்தி தொடர்பு துணை செயலர் கோவை செல்வராஜ் அறிக்கை: லோக்சபா தேர்தல் ஓட்டு பதிவிற்கு பின், 'அ.தி.மு.க.,வில் யாரும் ஒழுங்காக பணியாற்றவில்லை. எல்லாரும் பெயருக்கு தான் தேர்தல் வேலை செய்தீர்களே தவிர உண்மையாக உழைக்கவில்லை' என, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி புலம்பியுள்ளார். ஏமாற்றங்களும், துரோகங்களும் அவர் விதைத்தது தான். இப்போது முளைத்துள்ளதை அவர் தான் அறுவடை செய்தாக வேண்டும்.
'அடுத்த வீட்ல எப்ப கச்சேரி நடக்கும்; விடிய விடிய வேடிக்கை பார்க்கலாம்'னு தயாரா இருக்காரு போல!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'என் தாய் சோனியா, நாட்டிற்காக தாலியை இழந்திருக்கிறார்' என, பிரியங்கா தெரிவித்துள்ளார். அந்த தாலியை பறித்த குற்றவாளியை, விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி, ஆரத்தழுவி வரவேற்றவர்களோடு கூட்டணி வைத்துள்ளீர்களே... இது நியாயமா?
நேரத்துக்கு தகுந்த மாதிரி ராஜிவ் கொலையை காங்கிரஸ்காரங்க பயன்படுத்திக்கிறாங்கன்னா, ராஜிவ் குடும்பத்தினரும் அப்படியே தான் இருக்காங்க!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், பள்ளி கல்வி துறையையும் விட்டு வைக்கவில்லை. புதிய வகுப்புகள், புதிய கட்டடங்கள் என தனியார் பள்ளிகள், அரசிடம் எதற்கு அனுமதி கேட்டாலும், பெருமளவில் லஞ்சம் கேட்கப்படுகிறது. இப்படி லஞ்சமாக கொடுக்கும்பணத்தை, மாணவர்களிடம் இருந்து ஏதோ ஒரு வகையில் வசூலிக்கின்றனர். இதனால், நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உண்மை தான்... ஏப்ரல், மே வந்தாலே மாணவர்களுக்கு கோடை விடுமுறை கொண்டாட்டம் வரும்... பெற்றோருக்கு ஸ்கூல் பீஸ் கவலை வரும்!

