PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:தேர்தல்
பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசி வரும் கருத்துக்கள், காங்கிரஸ் மற்றும்,
'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை
காட்டுகிறது. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி,
அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார்.
அது சரி... 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், இவரை மத்திய அமைச்சர் ஆக்குவாங்களா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், சீரான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். நவீன மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை முறையாக துார்வாரி, பராமரித்து, எதிர்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடையில் தண்ணீர் பஞ்சம், மழைக்காலத்தில் வெள்ளம் என இரண்டும் இப்ப வழக்கமாயிடுச்சு... இதில், வரும் முன் காப்போம்னு அரசு செயல்படுவது தான் சிறப்பு!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: வடலுார் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து, வலுக்கட்டாயமாக சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமான பணிகளை, தி.மு.க., அரசு துவங்கியுள்ளது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி, தெய்வத் தமிழர் பேரவை நிர்வாகிகளை தி.மு.க., அரசு கைது செய்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படுவதை நிறுத்த, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்.
கடலுார் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவு இந்த விவகாரத்தில் எதிரொலிக்குமான்னு பார்க்கணும்!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தேங்காய் விளைச்சல் அதிகம் என கூறினாலும், தென்னை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதாலும், தேங்காய் விலை குறைந்து விடுகிறது. மத்திய, மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப தேங்காயை இறக்குமதி செய்ய வேண்டும்.
'ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'னு தமிழக அமைச்சர்கள் சொல்லி இருந்தாங்க... அப்படி செஞ்சா தேங்காய்க்கு மவுசு வந்துடும்!

