PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 24ல் துவங்கி ஜூன் 30 வரை
நடக்கவுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
வழங்காமல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவது அநீதியானது. இது,
ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
என்னமோ இந்த ஆட்சியில் ஆசிரியர்களுக்கு மட்டும் தான் துரோகம் நடப்பது போலவும், மற்றவர்கள் சுபிட்சமாக இருப்பது போலவும் இருக்கே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில், மக்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு; மக்கள் பயன்படுத்தும் ஆவின் பாலில் கொழுப்பை குறைத்து, விலை ஏற்றம்; போதை பொருள் புழக்கம்; கோவை குண்டுவெடிப்பு சதி மூடி மறைப்பு; சென்னை மழைநீர் வடிகாலுக்கு ஒதுக்கப்பட்ட, 4,000 கோடி ரூபாய் என்ன ஆனது; பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள்; வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தியது; மின் கட்டணம் உயர்த்தி தொழிற்சாலையை அழித்தது என சாமானியர்களை இன்னலுக்கு உள்ளாக்கியது இந்த அரசு.
தி.மு.க.,வின் இந்த மூன்றாண்டு ஆட்சி சாதனை, வேதனையா என்பதற்கு மக்கள் எழுதிய தீர்ப்பு ஜூன் 4ல் தெரிந்துவிடும்!
ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: தமிழக மக்களை இந்த மூன்றாண்டு தி.மு.க., ஆட்சி கசக்கி பிழிந்தது தான் மிச்சம். எஞ்சியிருக்கும் காலத்தில், என்ன செய்ய காத்திருக்கின்றனரோ என, மக்கள் வேதனையில் விடும் மூச்சு, இயற்கை வெப்பத்திற்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது.
அதெல்லாம் இருக்கட்டும்... அ.தி.மு.க., தொண்டர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்திற்கு ஏதாவது, 'ரிப்ளை' கிடைத்ததா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: காவல் துறை உயர் அதிகாரிகளையும், குறிப்பாக பெண் காவலர்களையும், சிறுமைப்படுத்தும் விதமாக, வரம்பு மீறி விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்த ஒருவர், கஞ்சா பொட்டலத்தை காரிலேயே வைத்திருந்தார் என்பதுதான், ஆறாம் அறிவுக்கு ஒவ்வாத அபத்தமாக இருக்கிறது.
அரசை பகைத்துக் கொண்டால், கஞ்சா வழக்கு பாயும் என்பது ஜெயலலிதா ஆட்சியில் பேமஸ்... அதை தி.மு.க.,வும் கையில் எடுத்திருக்கிறதோ?