PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் அறிக்கை: ஒடிசா
மாநில அரசியலில், முதல்வர் நவீன் பட்நாயக்கை விட பலம் வாய்ந்த மையமாக வலம்
வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியனின் அதிகார
துஷ்பிரயோகம் குறித்து பேசும் போது, பிரதமர் மோடி கூறிய வார்த்தைகளை,
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக பேசியதாக ஸ்டாலின் கூறுவது முற்றிலும்
தவறான அரசியல் வழியாகும்.
லலித் மோடி, நரேந்திர மோடியை ராகுல்
விமர்சனம்பண்ணப்ப, ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதிச்சுட்டார்னு உங்க
கட்சியினர் பொங்கியது மட்டும் நியாயமா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் காவல் துறை செயல்படுகிறதா. அந்த காவல் துறையை வழிநடத்தும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருக்கிறதா என, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி களை, தற்போது அவரை நோக்கி ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்ப துவங்கி இருப்பது, தி.மு.க., அரசில் காவல் துறை முழுதும் செயல் இழந்து விட்டதையே வெளிப்படுத்துகிறது.
வாஸ்தவம் தான்... இனியும் முதல்வர் சுதாரிக்கா விட்டால், சட்டசபை தேர்தலில் அதன் பலனை அனுபவிக்க வேண்டி வரும்!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: கடந்த காலங்களில் குறுவை சாகுபடியானது, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். அதுபோன்ற ஒரு நிலை விவசாயிகளுக்கு மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது. குறுவை தொகுப்பு திட்டத்தை நடை முறைப்படுத்துவதன் வாயிலாக விவசாயிகளுக்குவிதைகள், உரங்கள், பாசன குழாய்கள் உள்ளிட்டவை மானியமாக வழங்க வேண்டும்.
தேர்தல் விதிகள் வாபஸ் ஆனதும், குறுவை தொகுப்பு திட்டத்துக்கு கண்டிப்பா நிதி ஒதுக்குவாங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: அரசு பள்ளிகளில் 14,019 ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுக்களால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தி.மு.க., அரசின் மூன்றாண்டு கால சாதனை என, பள்ளிக்கல்வி துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. தலைகுனிய வேண்டிய ஒரு விஷயத்தை சாதனையாக காட்ட, அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.அரசு நினைத்திருந்தால் ஆறு மாதங்களில், நிரந்தர ஆசிரியர்களை நியமித்திருக்கலாம்.
நிரந்தர ஆசிரியர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொட்டி கொடுக்க, கஜானா நிலை சரியில்லையே!