PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: பா.ம.க., தலைவர்
அன்புமணி, 'நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், சில தொகுதிகளில் பா.ம.க.,
ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு சென்று விட்டன' எனக் கூறியுள்ளார். உண்மையிலே
பா.ம.க., தொண்டர்கள் இருக்க வேண்டிய இயக்கம் அ.தி.மு.க., தான். சமூக நீதி,
சமத்துவம், ஜாதிவாரி பிரதிநிதித்துவம் பேசும் பா.ம.க., தலைமை, சமீபத்தில்
எடுத்த அரசியல் நிலைப்பாட்டை, அதன் தொண்டர்கள் ஏற்கவில்லை. கட்சியின்
அங்கீகாரத்தையும்,சின்னத்தையும் இழந்தது தான் மிச்சம் என்று நொந்து
போயிருக்கும் தொண்டர்களை, பா.ம.க., இனி தக்க வைத்துக் கொள்வது கஷ்டம் தான்.
அப்புறம் என்ன...? பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு வலையை வீச வேண்டியது தானே!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என, தி.மு.க., கூறி வருகிறது. கல்வித் துறையில் அரசியல் கூடாது. அரசியலுக்காக மாணவர்கள், பெற்றோரை குழப்புவது ஏற்புடையதல்ல. இந்திய அளவில் தமிழக மாணவர்கள் 2ம் இடம் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் நோக்கோடு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தி.மு.க., அரசு கூறுவது மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் கூட்டணி கட்சிகளை துாண்டி விட்டு, தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்தாலும், இவங்க, 'நீட்' தேர்வு அரசியலை நீட்டித்துக் கொண்டே தான் இருப்பாங்க!
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி: தர்மபுரி சிப்காட், 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதேபோல், தர்மபுரி சிப்காட் தொழில் பேட்டையிலும் தொழிற்சாலைகள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த ரெண்டு மாவட்டத்துலயும் விவசாயம் மேம்படவும், தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் படும் அவஸ்தைக்கும் ஏதாவது தீர்வு இருக்கா?
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன் பேட்டி: குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், மத்திய அரசு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கிஉள்ளது. அதை, 25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு உயர்த்தி தந்தால் மட்டும் போதுமா...? மாநில அரசிடம் தோழர்கள் நிவாரணத்தை ஏத்தி கேட்க மாட்டாங்களா?