PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சோமண்ணா, கர்நாடகத்தைச்
சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை அமைச்சரவையில், கர்நாடக வீட்டுவசதித் துறை
அமைச்சராக பொறுப்பு வகித்தபோதே, மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
மத்திய அமைச்சரான பின், கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன்
வாயிலாக,நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் அவர் இழந்து விட்டார்.
இனியாவது, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக செயல்பட வேண்டும்.
ஒண்ணு,
ரெண்டு தொகுதியில் ஜெயிச்சு, இவங்களும் மோடி அமைச்சரவையில் இடம்
பெற்றிருந்தால் அந்தஜல்சக்தி துறையை நாம கேட்டு வாங்கி இருந்திருக்கலாம்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: சமாதானம் கூறி, தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவச்செயல் என்ற பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை உணர்ந்து, இனி அவர்களை புறக்கணிப்புக்கு பழக்குகிறேன் என்ற புது முடிவை பழனிசாமி எடுத்துள்ளார். தொடர் தோல்வி என்பதை முறியடித்து, இடைவெளி விட்டு தோல்வி என்ற சாதனையோடு, கட்டுத் தொகையை மட்டுமல்ல, தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டுக்கட்டான தொகையையும் காப்பாற்றி இருக்கிறார்.
'தோற்றாலும், புறக்கணிச்சாலும் திட்டுறாரே... பழனிசாமி எது செய்தாலும், பழித்து பேசணும்கிற முடிவுல இருப்பார் போலும்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதம், 2,000 ரூபாய் கொடுப்பதாகக் கூறி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த வழி தெரியாமல், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி உள்ளது. 'பண ஆசை காட்டி மோசம் செய்துவிட்டது' என, கர்நாடக மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.
அப்ப, 10 வருஷம் பா.ஜ., ஆட்சியில் பலமுறை பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றியது எதற்காக?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகம் - கர்நாடகம் ஆகிய இரு மாநில உறவை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா, மேகதாது அணை விவகாரமாக பேச்சு நடத்த வேண்டும். தமிழகத்தின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் வைத்து, நியாயம் கிடைக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும்.
அமைச்சர் நடுநிலையா தான் இருக்கணும்... ஆனால், நியாயத்தை மட்டுமே பார்த்தால், சோமண்ணா அடுத்த தேர்தலில் மண்ணை கவ்விடுவாரே!