PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'தமிழகத்துக்கு
தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்'
என, அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார். செல்லட்டும்... ஆனால், இதுவரை சென்ற
நாடுகளில் இருந்து எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்பதை
அறிவித்துவிட்டு செல்ல சொல்லுங்கள்.
பிரதமர் மோடி வெளிநாடு போனதுக்கெல்லாம் அவங்க முதலீடு பட்டியல் கேட்டா, இவர் கொடுக்கறதுக்கு தயாரா வச்சிருக்காரா?
பாரத் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பிரபு பேட்டி:
தமிழக கோவில்களில் திருமணம் முடிந்த பின், உணவு உண்பது, ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் உபசரிப்பு. உணவு உண்பதால் கோவில்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றால், மாற்று ஏற்பாடுகளை செய்யலாம்; திருமணம் செய்பவர்களிடம் சுத்தம் செய்வதற்கு கட்டணம் பெறலாம். ஆனால், திருமணம் முடிந்த பின், உணவு பரிமாறக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அறநிலைய துறை சுற்றறிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இன்னும் கொஞ்சம் நாளில் கோவில்களில் பிரசாதம் கொடுக்கறதையும் நிறுத்த சொல்வாங்களோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
பண்டைய காலத்தில், தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக, செங்கோல் நிறுவி ஆட்சி புரிந்தனர். நேர்மையான, நம்பிக்கையான, நடுநிலையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக உறுதி பூண்டு, பிரதமர் மோடி, பார்லிமென்ட்டில் செங்கோலை நிறுவி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஆனால், செங்கோலை, 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி அகற்ற கூறியது கண்டிக்கத்தக்கது.
நேர்மை, நடுநிலை, நம்பிக்கை எல்லாம் இருந்திருந்தா, இண்டியா கூட்டணி ஆட்சியை பிடித்து, செங்கோலை அவங்க கொண்டு வந்திருப்பாங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை:
'தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை' என, நடிகர் விஜய் குறிப்பிடுகிறார். இக்கருத்து, தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு விடுத்த சவாலாகவே நாங்கள் பார்க்கிறோம். போதைப் பொருள் தமிழகத்தில் அதிகரித்து விட்டது என்ற குற்றச்சாட்டை யும் அவர் முன் வைக்கிறார். அதற்கு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில், 60க்கும் மேற்பட்ட இறந்தவர்களே சாட்சி.
அவர், தி.மு.க.,வை தான் சொல்றார்... ஏன்னா அவங்க கட்சியில் தலைவர் யாருன்னு முடிவானா தானே, அவர் நல்லவரா, மோசமானவரா என்ற வாதமெல்லாம் வரும்!