PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர்டாக்டர் சரவணன் அறிக்கை: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 'தி.மு.க., ஒன்றும் சங்கரமடம் அல்ல; வாரிசு அரசியல் கிடையாது' என்றார். ஆனால், ஸ்டாலின் துணை முதல்வராகவும், கட்சியில் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதேபோல் தன் மகன் அரசியலுக்கு வரமாட்டார் என ஸ்டாலின் கூறினாலும், உதயநிதிக்கு எம்.எல்.ஏ., இளைஞரணி செயலர்,அமைச்சர் போன்ற பதவிகளை வழங்கினார். 'கருணாநிதி போல ஸ்டாலின் இல்ல'ன்னு யாரும் குறை சொல்ல முடியாதபடிக்கு முதல்வர் ஆட்சி நடத்துறதாக, 'பாசிட்டிவ்'வா எடுத்துக்கலாமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: எம்.ஜி.ஆர்., பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதற்கும், ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பு சட்ட 9வது அட்டவணையில் சேர்த்து சட்ட பாதுகாப்பு கொடுத்ததற்கும், பழனிசாமி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்து நிறைவேற்றியதற்கும், தி.மு.க., சொந்தம் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்.'டாஸ்மாக்'கையும் இவங்க தானே கொண்டு வந்தாங்க... அதுக்கு மட்டும் ஏன் பெருமை அடிச்சுக்க மாட்டேங்குறாங்க
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: மழைக்கு முன், காவிரியில் கர்நாடகா படிப்படியாக நீரை திறந்து விட்டிருந்தால் தமிழகத்தில் விவசாயம் செழித்திருக்கும்.மொத்தமாக திறந்து விட்டதால், உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது.வந்த தண்ணீரை சேமிக்கும் விதமாக, தமிழகத்தில் அணைகள் கட்டாமல், பல ஆறுகள், கால்வாய்களை துார்வாராமல் இருப்பது இவரது கண்ணுக்கு தெரியலையா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டிக்கதுப்பில்லை. இங்கு சிறுபான்மையினர் மீது எந்த தாக்குதலும் இல்லாத நிலையில், சிறுபான்மையினருக்கு ஆபத்து என பூ சுற்றிக் கொண்டிருக்கின்றனர். எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. மலிவு அரசியல்.பிறகு, தேர்தலில் அவங்களுக்கு வங்கதேசத்து சிறுபான்மையினரா வந்துஓட்டு போடப் போறாங்க? இங்கே இருப்பவர்களை சோப்பு போட்டு, மதி மயங்க வைத்து ¥'ஜோர்' தட்டினால் ஓட்டு தானாக வந்து விழும் என நினைக்கும் இவர்கள் புத்திசாலிகள் தானே!