PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை: கடந்த, 30
ஆண்டுகளாக, இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து, தமிழக
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்து வருகின்றனர்.
கடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இதை வைகோ எடுத்துரைத்தார். சமீபகாலமாக,
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், படகுகள் பறிமுதல் செய்யப்படும்
கொடுமையும் அதிகரித்திருப்பதை பார்லிமென்டில் நானும் பேசி, மத்திய அரசின்
பாராமுகத்திற்கு கண்டனம் தெரிவித்தேன்.
நாளைக்கு உங்க வாரிசு எம்.பி.,யானாலும், அவரும் இதைத்தான் பேச வேண்டியிருக்கும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அண்ணாமலையின் அரசியல் கருத்துகளுக்கு பதில் கூறத் தெரியாத அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவரது வயதை சுட்டிக்காட்டி வசைபாடுவது அறியாமையே. ஜெயலலிதா, 34 வயதில் நேரடியாக அ.தி.மு.க.,வில் இணைந்து, 43 வயதில் தமிழக முதல்வராக அரசாளவே வந்து விட்டார். அதனால் உயரங்களை எட்டிப்பிடிப்பதற்கு வயது ஒரு குறையல்ல; தகுதி தான் முக்கியம். தன் கட்சி சொந்த வரலாறு தெரியாமலேயே பழனிசாமி பேசுவது அபத்தம்.
பா.ஜ.,வினர் கூட அண்ணாமலைக்கு இப்படிமுரட்டுத்தனமா, 'முட்டு' கொடுக்கலையே!
தமிழக காங்., பொதுச்செயலர் ரங்கபாஷ்யம் பேச்சு: பெரும்பான்மை வெற்றி களிப்பில் ஆட்சி புரிந்த போது, பா.ஜ., நினைக்கிற மசோதாக்களை நிறைவேற்றி ஜனநாயகத்தை சிதைத்தனர். 'இண்டி' கூட்டணி பலம் பெற்றிருப்பதால், வக்பு வாரிய திருத்தம் மசோதா, மத்திய அரசின் பணிகளில் நேரடி நியமனம் விவகாரத்தில்மத்திய அரசு அடக்கி வாசிக்கிறது என்றால், அது ஜனநாயகத்திற்கும், அதன் முகமாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும் கிடைத்த வெற்றி.
'இண்டி' கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சி தலைவர்களை பின்னுக்கு தள்ளிட்டு, ராகுலை மட்டும் உயர்த்தி பிடிப்பது நியாயமா?
தமிழக காங்., பொதுச்செயலர் கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை: விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக, காங்கிரஸ் தந்த அரியாசனத்தை உதறிவிட்டு, பா.ஜ., பக்கம் சென்றதால், பதவியில்லாமல் இருக்கும் தன் நிலை குறித்து விஜயதாரணி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம், காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ய நினைப்போருக்கு சரியான பாடம்.
பா.ஜ.,வில் தேர்தலில் நின்று தோற்றால் தான் பதவி தருவாங்க என்பது விஜயதாரணிக்கு தெரியாதோ?

