PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: சினிமாவிற்குள்
அரசியல் உள்ளது. வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல், சினிமா துறையிலும்,
அரசியல் துறையிலும் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடி இருக்கும்.
சினிமா துறையில் இருந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால், அவர் நன்றாக
சிந்தித்து தான் வந்திருப்பார். அவருக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை.
லோக்சபா தேர்தலில் சீட் தராமல் காங்கிரசில் இவருக்கு கன்னிவெடி வச்சதை தான் நாசுக்கா சொல்றாரோ?
திரைப்பட இயக்குனர்ஆர்.கே.செல்வமணி பேட்டி: மக்களை நேசிக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில் எல்லாரையும் விட மிகவும் புத்திசாலி மக்கள் தான். மக்கள்நல்ல முடிவு எடுப்பர். சினிமாவில் நடிகர் விஜயை நம்பியதை போல, அரசியலிலும் அவரை மக்கள் நம்புவதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்டால் அரசியலில் ஜெயிக்கலாம்.
அந்த மக்கள், புத்தியை பயன்படுத்த முடியாத அளவுக்கு, நோட்டு கொடுத்து ஓட்டு வாங்குற கலாசாரத்தை புகுத்திட்டாங்களே!
தமிழக பா.ஜ., மீனவர் அணி மாநில தலைவர் எம்.சி.முனுசாமி அறிக்கை: இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தமிழகமீனவர்களை கிள்ளுக்கீரையாக கருதி, தொடர்ந்து தாக்குவதற்கும், படகுகள் பறிமுதல் செய்வதற்கும் நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்இந்தியர்களாக கருதாமல்,தமிழர்களாக கருதி தாக்குகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொடர் தாக்குதலை நிறுத்த சர்வேதேசநீதிமன்றத்தை அணுக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தமிழக மீனவர்கள்வாழ்வில் வசந்த காலம் வந்துடும்னு சொன்னவங்க இவங்க தானே?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தர்மபுரிஅரசு மருத்துவமனை அருகே உணவகத்தில் சாப்பிட்ட போலீஸ் எஸ்.ஐ., பணம் தரமறுத்து, பணம் கேட்ட உரிமையாளரை அடிக்க பாய்ந்த காட்சியை காண நேர்ந்தது.பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டியவர்கள், பொறுப்பற்று பொது வெளியில் நடந்து கொள்வது வெட்கக்கேடு. இவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன்,துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கான்ஸ்டபிள் சாப்பிட்டாலே பணம் தர மாட்டார்... எஸ்.ஐ., கிட்ட பணம் கேட்டா சும்மாஇருப்பாரா?