PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'எப்போது
சென்னையில் ஒன்றாக சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்' என, முதல்வரிடம்,
ராகுல் கேட்டுள்ளார். எவ்வளவு நக்கல் பாருங்கள் அவருக்கு... ஆட்சிக்கு
வந்து மூன்றரை ஆண்டுகளாகியும், சென்னையில் சைக்கிள் ஓட்ட கூட முடியாத
அளவுக்கு, ஒழுங்கான சாலைகள் அமைக்காமல் இருப்பதால், முதல்வர் அமெரிக்கா
சென்று சைக்கிள் ஓட்டுவதை குத்திக் காட்டுகிறாரோ?
இதுக்கு, 'பார்முலா - 4 கார் பந்தயம் நடக்குற அளவுக்கு சென்னையில் ரோடுகளை வச்சிருக்கோம்'னு, தி.மு.க.,வினர் சொல்வாங்க பாருங்க!
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேட்டி: மூட பழக்க வழக்கங்களை மாணவர்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய நிகழ்ச்சிகளை, பள்ளிகளில் நடத்தக்கூடாது. அப்படி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பள்ளி தலைமையாசிரியரை அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை உயர்வாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் படிக்காமல் இருப்பதை வைத்து, ஒட்டு மொத்த பள்ளிக்கல்வித்துறை தரத்தை, கவர்னர் குறைத்து பேசுவதை ஏற்க முடியாது. காழ்ப்புணர்வில் தான், இப்படி கருத்துக்களை கூறி வருகிறார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள பள்ளிக்கல்வித் துறையை வச்சி, எதிர்க்கட்சியா அரசியல் செய்வதை விட, கவர்னரை எதிர்க்கிறது தான் முக்கியம்னு நினைக்கிறாரோ?
திருச்சி, ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி: பூரண மதுவிலக்கு என்பது தான், ம.தி.மு.க.,வின் இலக்கு. எங்கள் தரப்பில் இருந்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த அரசு, மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும். எதிர்காலத்தில், மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
இவர் சொல்ற அந்த எதிர்காலம், இவரோட எத்தனையாவது தலைமுறைனு தெரியலையே?
பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா; நகர்ப்புற தேர்தல், ஊரக பகுதிகளுக்கான தேர்தல் ஒன்றாக நடக்குமா; எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பது பற்றி முன்கூட்டியே தகவல் அளித்து, தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
அதையெல்லாம் இப்பவே தெளிவுபடுத்திட்டா எதிர்க்கட்சிகள் கூட்டணி செட்டில்மென்ட் போட்ருவாங்களே... அப்புறம் எப்படி அறிவிப்பார்?