PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு:
தமிழகத்தில் பா.ஜ.,வை வலிமைப்படுத்தவும், வருங்காலத்தில் மக்கள் பணியை
திறம்பட செய்யவும், ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து பா.ஜ.,
நிலைத்திருக்கவும், உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. உறுப்பினர்
சேர்க்கையை, அதற்கான பொறுப்பாளர்கள், முன்னுரிமை கொடுத்து சிறப்பாக முடிக்க
வேண்டும்.
உறுப்பினர்களை சேர்த்தால் மட்டும் போதுமா...? நிதி
ஒதுக்கீட்டில் தாராளம் காட்டி, தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தால் தான்,
ஆட்சி, அதிகாரத்தை எதிர்பார்க்க முடியும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: பொது பட்டியலில்இடம் பெற்றுள்ள கல்வி குறித்த எந்த முடிவும், மத்தியஅரசு எடுப்பது தான் இறுதி என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநிலங்களின் விருப்பப்படி கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்வதில், மத்திய அரசு தடையாக இருக்கக் கூடாது. நாடு முழுதும் ஒரே கல்விக் கொள்கை. நிதி பகிர்வில் மட்டும் மாநிலத்திற்கு மாநிலம்வேறுபாடு ஏன்?
சர்வதேச அளவில் இந்திய மாணவர்கள் போட்டி போட, நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்வி இருக்க வேண்டும் என மத்திய அரசு நினைப்பது தவறா?
ஹிந்து மக்கள் கட்சிநிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி: பள்ளிகளில் மாணவர்களுக்கு, நீதி போதனை வகுப்பு நடத்துவது வழக்கம்.ஆன்மிகம் மதமாகி விடாது. ஆனால், அரசு உதவி பெறும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பள்ளிகளில், தினந்தோறும் மத பிரசாரம் நடக்கிறது; கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் கிறிஸ்துவர்கள் கைகளில், பள்ளிக்கல்வித் துறை சென்று விட்டது. இவர்கள் சதி வலையில் அமைச்சர் மகேஷ் சிக்கி விட்டார்.
பரமசிவன் கழுத்து பாம்பாக இருக்கும் அவருக்கு, யாராவது சதிவலை பின்ன முடியுமா?
பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி: ஹிந்து பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் மீது, வழக்கு தொடுப்பது தி.மு.க., ஆட்சியில் எப்போதும் நடக்கும். மற்ற மதத்தினரை தாஜா செய்வதற்கு, மிகப்பெரிய ஆயுதமாக இதை தி.மு.க., பயன்படுத்துகிறது. சிறுபான்மையினரை தாஜா செய்து, ஓட்டு வங்கியை தன் வசம் முழுமையாக வைத்திருக்கிறது. மகாவிஷ்ணு மீது வழக்கு போட்டதற்கு பா.ஜ., தவிர வேறெந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
சிறுபான்மையினர் ஓட்டுகளை பற்றி கவலைப்படாமல், ஹிந்து மதம், ஆன்மிகத்திற்கு ஆதரவாக நீங்க ஒருவராவது குரல் கொடுக்குறீங்களே!