PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அறிக்கை:
நடிகர் விஜயுடன் பஜ்ஜி சாப்பிட்டு, டீ ருசித்தேன். வெளியில் தெரியாத
வகையில் ரகசிய அரசியல் வியூகம் அமைப்பது குறித்து பேசினேன். விடிய விடிய,
நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன. அதை பதிவு செய்ய விஜயுடன் ஒரு, 'செல்பி'
எடுத்துக் கொள்ளலாமே என பார்த்தால், அது கனவு. 'கனவுகள் நம் நினைவுகளின்
நகல்கள்' என சொல்வர். சமீப காலமாக என்னிடம் விஜய் பற்றிய கேள்விகள்
எழுவதால், இந்த கனவு வந்திருக்கலாம்.
இதன் மூலமா என்ன சொல்ல வர்றாரு... 'தமிழகத்தில் விஜய் கட்சி ஆட்சியை பிடிப்பதும் கனவா தான் இருக்கும்'னு கணிச்சு சொல்றாரோ?
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர், எச்.ராஜா அறிக்கை:
த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், தன் மகன் ஜேசன் சஞ்சயை, சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்து, பன்மொழி படிக்க வைத்தது போல், படூரில் நடத்தி வரும் அவருக்கு சொந்தமான, விஜய் வித்யாஸ்ரம், சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் கல்வி கட்டணமாக பெற்று, மாணவர்களுக்கு மும்மொழி கற்பித்து வருகிறார். அதுபோல, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தை யும் மெட்ரிக்குலேஷன் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி, மும்மொழி கல்வியை போதிக்க வழி வகை செய்யும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு, விஜய் ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் எல்லா அரசு பள்ளிகளும் தரம் உயர்ந்துட்டா, விஜய் பள்ளி வியாபாரம் படுத்துடாதா?
த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பேட்டி:
தமிழகத்தில், அ.தி.மு.க., பெரிய கட்சி என்பதால், அக்கட்சி தலைமையில், தி.மு.க.,வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பது, எங்கள் தலைவர், ஜி.கே.வாசனின் விருப்பம். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செல்லும் முன்முயற்சியை பழனிசாமி எடுக்க வேண்டும்.
மூத்த அரசியல் தலைவரான வாசனே, அதற்கான முன்முயற்சிகளை எடுக்கலாமே!
நடிகர் கமல் ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் அருணாசலம் அறிக்கை:
தன் கொள்கையில் இருந்து சிறிதும் விலகாமல், கமல் காட்டும் பாதையில் பயணித்து, அரசியலில், எங்களின், ம.நீ.ம., கட்சியினர் பீடுநடை போட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பார்லிமென்டிலும், அடுத்த ஆண்டில் சட்டசபையிலும், ம.நீ.ம.,வின் குரல் ஒலித்து, வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தும்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தல்ல சீட் தராம, 'அல்வா' தந்த மாதிரி, 2026 சட்டசபை தேர்தல்லயும் தந்துடாதீங்கன்னு, தி.மு.க.,வுக்கு சூசகமா சொல்றாரோ?

