PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி: பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் இருப்பை வெளிப்படுத்தி கொள்வதற்காகவும், பத்திரிகைகளில் அவர் பெயர் வர வேண்டும் என்பதற்காகவும், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். துணை முதல்வரை ஒருமையில் பேசி இருக்கிறார். அவர் இங்கிதம், நாகரிகம் தெரியாதவர். அவர் எப்படி ஐ.பி.எஸ்., படித்தார் என தெரியவில்லை.
இவரது தம்பி ஜெகன் பெரியசாமி, 'முதல்வருக்கு எதிராக பேசுவோரை அடிச்சு உதைங்க'ன்னு பேசியது மட்டும் இங்கிதம், நாகரிகமா?
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: சமீபத்தில் நடந்த ஒன்பதாவது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனம் நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று பேசுகையில், 'ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி. நுாறாண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் இதைத்தான் செய்தனர்' என குறிப்பிட்டுள்ளார். இப்போது தான் புரிகிறது, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.
இந்தியாவை கைப்பற்றிய பிரிட்டிஷாரால் கூட அழிக்க முடியாத தமிழ் மொழியை, ஹிந்தி அழிச்சிடுமா என்ன?
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா அறிக்கை: கடந்த 1937ம் ஆண்டில், தமிழ் மொழி போராட்டம் துவங்கி விட்டது. தாளமுத்து, நடராஜன் உட்பட நுாற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை பலி கொடுத்து, நுாற்றாண்டை நோக்கி போராடி வரும் இனம் தமிழினம். மொழி போரில் உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக, ஜனவரி 25ம் தேதியை தமிழக அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றன. இதை தமிழக அரசு, அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்க, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, சட்டமாக்க வேண்டும்.
அந்த மொழி போரில் எந்த தலைவரும், அவரது பிள்ளைகளும் உயிரிழக்கலை என்பதை யாராவது யோசித்து பார்த்தீங்களா?
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேட்டி: மத்திய அரசின் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல. மாறாக, மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி பணம். தேசிய கல்விக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில், மத்திய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்றும் அடிபணிய மாட்டார். பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் சட்டப்படியான உரிமை. இந்த நிதி கிடைக்கும் வரை, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இவங்க போராடி நிதியை வாங்குறதுக்குள்ள, சட்டசபை தேர்தலே வந்துடும் போலிருக்கே!

