PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பேச்சு: 'உங்களுடன் ஸ்டாலின்' என
பெயர் சூட்டியதால், முதல்வரின் பார்வைக்கு போகும்; அவரது கைகளுக்கு சென்று
சேரும் என நம்பி, பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் வைகை ஆற்றில்
வீசப்பட்டுள்ளன. இது, நம்பி ஓட்டளித்த மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயல்.
இனியும் பொய் பிரசாரம் செய்து, தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம். 'ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல, தமிழகம் முழுக்க நடக்கும்,
உங்களுடன் ஸ்டாலின் மனுக்களின் கதி, இந்த ஒரே சம்பவத்தில் தெரிந்து
விட்டது!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட, சிலைகளை கரைக்க, தி.மு.க., அரசு 1,008 கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், மேரி சிலையை, குழாய் ஒலிபெருக்கியுடன் ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். இதற்கு எப்படி அனுமதி பெற்றனர் என தெரியவில்லை. மேரிக்கு அனுமதி; பிள்ளையாருக்கு அனுமதி மறுப்பு. இதுதானா சமூக நீதி? ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.
ஹிந்துக்களுக்கு, 108, 1,008 மந்திரங்களில் நம்பிக்கை இருப்பதால் தான், விநாயகர் விழாவுக்கும், 1,008 கட்டுப் பாடுகளை விதிச்சாங்களோ?
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: தொடர்ந்து மொத்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் தி.மு.க., கூட்டணியை விட்டுவிட்டு, 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் பழனிசாமியிடமோ, ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற முடியாத சீமானிடமோ, ஒரு தேர்தலை கூட இதுவரை சந்திக்காத விஜயிடமோ, காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் வருவர் என்பது, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு காத்திருக்கும் யோகிபாபு கதை தான்.
அது உண்மைதான்... ஆனா, தி.மு.க.,வுக்கு எதிரான இந்த கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துட்டா, ஆட்டத் தின் போக்கையே மாத்திடலாமே!
தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேட்டி: கல்வியை அரசியல் பழிவாங்குதலுக்குரிய ஒரு கருவியாக மாற்றும் மத்திய அரசின் முயற்சியை தடுக்க வேண்டும். பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் இயங்க வேண்டும். தற்போது இதுவே பாகுபாடுக்கும், பழிவாங்கலுக்கும் பயன்படுகிறது என்பது வருத்தத்திற்குரியது. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் அரசியல் வித்தியாசம் கொண்டிருந்தாலும், மாணவர் களின் கல்வி உரிமையில் பாகுபாடு காட்டுவது, ஒரு ஜன நாயக அரசுக்கு ஏற்றது அல்ல.
மத்திய, மாநில அரசுகளின் பொது பட்டியலில் கல்வி இருக்கும் வரை, இந்த பஞ்சாயத்துகளுக்கு முடிவே இருக்காது!