PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: தி.மு.க.,வினர்,
மேடைகளில் தமிழை பேசிவிட்டு தங்கள் குழந்தைகளை தமிழ் பயிற்று
மொழியாக உள்ள பள்ளிகளில் சேர்க்கவில்லை. பத்தாவது வரை தமிழ்
கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றுவரை போராடித்தான்
வருகிறோம். தமிழ், தமிழ் என சொல்லி, தமிழை ஏற்றம் செய்ததைவிட, தமிழை
வைத்து, தமிழகத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டது தான் அதிகம்.
திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்துார் மணி பேட்டி: எம்.ஜி.ஆர்., கட்சிக்காரராக இருந்து நடிகராகவும் இருந்தார். கட்சியில் நீண்ட காலம் இருந்தார். எடுத்ததுமே முதல்வராகவில்லை. சட்டசபை உறுப்பினராக வந்தார்; பின்புதான் முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது, நடிகராக இருப்பவர்கள், எடுத்ததுமே முதல்வராக முடியும் என்று நம்புகின்றனர். அது வெற்றி பெறாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
வாஸ்தவம் தான்... 10 வருஷம்எம்.எல்.ஏ.,வாக இருந்த பிறகே, எம்.ஜி.ஆர்., முதல்வரானார் என்ற உண்மையை இப்போதைய நடிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்!
அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலர் கே.சீனிராஜ் அறிக்கை: மக்களின் கடைக்கண் பார்வை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பக்கம் திரும்பி விட்டது. இனி த.வெ.க., தலைவர் விஜயும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பழனிசாமியுடன் இணைந்தால், அவர்கள் இருவரின் கட்சிகளுக்கும் பாதுகாப்பும், அங்கீகாரமும் கிடைக்கும்.
'புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மீது வந்து படுத்துக்குங்க' என்பதுபோல அல்லவா இவரது கருத்து இருக்குது!
தென்சென்னை மத்திய மாவட்ட காங்., தலைவர் எம்.ஏ.முத்தழகன் பேச்சு: பல்வேறு இடையூறுகளை தாண்டி, காங்கிரஸ் கட்சி, 130 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தான் சாதாரண சிறுபான்மையினர் தலைவராக முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனத் துவங்கி, தற்போது விஜய் வரை அரசியலுக்கு வந்தும், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உயிரோட்டமாகவே இருக்கிறது.
தமிழகத்தில், காங்., கட்சிஉயிரோட்டமா இருக்கிறது என்றால், அதற்கு கூட்டணி என்ற போர்வையில் அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய கட்சிகள் தரும் ஆக்சிஜன் தான் காரணம்!