PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேச்சு:
பெண்களுக்கு எங்கும், ஏன் இணையத்தில் கூட பாதுகாப்பு இல்லை. சமூக
வலைதளங்களில் நடக்கும் புதுவிதமான துன்புறுத்தல்களால் பெண்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இணையத்தில் தங்கள் அடையாளங்களை
மறைத்து, பெண்களை ஏமாற்றுகின்றனர். இணையத்தில் பெண்களுக்கு
எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க சட்டமும், தனி நீதிமன்றங்களும்
தேவை.
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: பிற மருந்தகங்களை ஒப்பிடும் போது முதல்வர் மருந்தகத்தில், 75 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளன. இதன் வாயிலாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவ செலவிற்கான சுமை பெரிய அளவில் குறையும். இத்திட்டத்தை நாங்கள் வரவேற்று பாராட்டுகிறோம்.
தங்கள் தொழில் பாதிக்கும் எனக் கருதி, தனியார் மருந்தகங்கள் இதற்கு எதிராக களம் இறங்காமல் இருக்கணும்!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: தமிழகத்தில், வேற்று மொழி பேசும் 2.50 கோடி மக்கள் ஆங்கிலத்தையும், தங்கள் தாய்மொழியையும் கற்கும்போது, அங்கே தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. அவர்கள் தமிழை கற்க விரும்பினாலும், இருமொழிக் கொள்கையால் அவர்களுக்கு, குறிப்பாக, அரசு பள்ளியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, அரசு பள்ளியில் மும்மொழிக் கொள்கை அவசி யம் என்கிறார் பிரதமர் மோடி. ஹிந்தி, சமஸ்கிருதம் எங்கும் திணிக்கப்படுவதில்லை.
'மும்மொழி கொள்கை எதிர்ப்பு' என்ற போர்வையில், மத்திய அரசை எதிர்க்க கிடைத்த வாய்ப்பை திராவிட மாடல் அரசு லேசில் விட்டு தருமா?
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அரசு பள்ளிகள் தவிர்த்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய பாடத்திட்டத்திற்கு மாறி, மும்மொழிக் கொள்கையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. ஆங்கிலத்தை உலக தொடர்பு மொழியாக கருதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே, உள்நாட்டின் தொடர்புக்கு, ஹிந்தி அவசியம் என்ற கருத்தாக்கம் மேலோங்கி நிற்கிறது. எனவே, மொழிக்கொள்கையை திராவிட இயக்கங்கள், மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் வந்திருக்கிறது.
'திராவிட நாடு' கோரிக்கையை அண்ணாதுரை கைவிட்ட மாதிரி, இருமொழிக் கொள்கையையும்கைவிட வேண்டிய சூழல் உருவாகிடுச்சு!

