PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

திருச்சி தொகுதி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ அறிக்கை:
மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால்,
உ.பி., ராஜஸ்தான், ம.பி., பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களின்
எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகம், கர்நாடகா, கேரளா,
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை
குறையும். தொகுதி குறைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய
தமிழகம்
உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு, மத்திய அரசு அளிக்கும் தண்டனையா?
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பேட்டி: தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, 181ல் கூறியபடி, முதல்வர் ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சியில் தர்மபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் நேரில் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
நிரந்தர ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளே அந்தரத்துல தொங்கிட்டு இருக்கிற சூழல்ல, இவரது கோரிக்கை எல்லாம் எடுபடுமான்னு தெரியலையே!
அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பெங்களூரு புகழேந்தி பேச்சு: ஜெயலலிதா மறைந்ததும், 'வெற்றிடம் ஏற்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினி அன்றே தீர்க்கதரிசியாகக் கூறினார். அப்போது வெற்றிடம் இல்லை என, நாங்கள் கருதினோம். அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்பதை இப்போது நாங்கள் உணர்கிறோம்.
'அரசியலுக்கு வர மாட்டேன்'னு முடிவெடுத்தப்பவே, ரஜினி ஒரு தீர்க்கதரிசி என்ற உண்மைஇவருக்கு தெரியலையா?
தமிழருவி மணியன் தலைமை யிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குமரய்யா பேட்டி: 'மும்மொழி திட்டத்தால் தமிழ் அழிந்து விடும்' என, தி.மு.க.,வினர் போர் பரணி நாடகம் ஆடுகின்றனர். அரசு கட்டடங்களில், 'தமிழ் வாழ்க' என்ற மின்னொளி பலகைகளை வைப்பதால் மட்டும், தமிழ் வளரும் என்ற பகுத்தறிவு கொண்டவர்கள், மீண்டும் ஓர் ஏமாற்று வேலைக்கு தயாராகி விட்டனர். சென்னை மாநகராட்சி மண்டல, வட்ட அலுவலக பெயர் பலகைகளில் வார்டு கவுன்சிலர் என, குறிப்பிட்டு உள்ளனர். வட்ட மாமன்ற உறுப்பினர் என குறிப்பிடத் தடையாய் இருப்பது எது?
இப்படி எல்லாம் நியாயமா கேள்வி கேட்டால், இவருக்கும் பா.ஜ.,வின் பங்காளின்னு முத்திரை குத்திடுவாங்க!

