PUBLISHED ON : மார் 01, 2025 12:00 AM

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., பேச்சு:
துணை முதல்வர் உதயநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
பிரதமரை பார்த்து, 'கெட் அவுட் மோடி' என்கிறார். இப்படியே பேசிக்
கொண்டிருந்தால், 'உள்ளே' வைத்து விடுவர்.
பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை அறிக்கை: கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு, 66 உயிர்களை பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமினில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரை பலியிட்டுள்ளனர். ஜாமினில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், என்ன செய்கின்றனர் என்பதை கூட கண்காணிக்காமல், மாவட்ட காவல் துறை செயல்படுவது, ஒட்டுமொத்த தமிழக காவல் துறைக்கே கரும்புள்ளி.
மும்மொழி பிரச்னை, சீமான் பிரச்னை என, மக்கள் கவனத்தைத் திசை திருப்பிவிடத் தெரிந்த அரசு, இவர் பேசுறதை காதாலும் கேட்காது; விடுற அறிக்கையையும் படிக்காது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தென் தமிழகத்தின், 9,990 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும். ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்தின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும். மீன்வளம் குறைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகும். காலநிலை மாற்றத்தையும், பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தையும், இத்திட்டம் அதிகமாக்கும். எனவே, இதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அடுத்ததாக என்ன பிரச்னையைக் கையிலெடுக்கலாம்ன்னு, தி.மு.க.,வுக்கு இவரே சொல்லிக் கொடுக்கிறாரே... தி.மு.க.,வில், 'அறிவுஜீவி டீம்' ஒண்ணை உருவாக்கி, அதற்கு ஆலோசனை சொல்ல, இவரை அழைக்கும் காலம் வெகு துாரத்தில் இல்லை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு அதற்கான பாடத்திட்டத்தை வகுக்காமல் இருப்பதும், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதும், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ - மாணவியரை வஞ்சிக்கும் செயல். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியரை தனியார் பள்ளி களுக்கு மடைமாற்றம் செய்யும் முயற்சி. மத்திய அரசின் திட்டத்தை உரிய முறையில் தி.மு.க., அரசு நிறைவேற்றியிருந்தால், 6,000 கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். இதையும் தி.மு.க., அரசு கெடுத்துவிட்டது.
இப்படியெல்லாம், மத்திய பா.ஜ., அரசுக்கு இசைவு தெரிவிச்சிட்டா, தமிழகத்துல ஓட்டே அள்ள முடியாதே... உங்களை, அ.தி.மு.க.,வுலருந்து உங்க, 'சகலை' ஏன் ஒதுக்கி வச்சிருக்காருன்னு, இப்ப தான் புரியுது!