PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,
அதிகரித்துக் கொண்டே வருவது, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
குறிப்பாக, பள்ளி மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான
குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பது, அரசின் மீது
அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மத்திய இடைநிலை கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்குவதற்கான விதிகளில் கொண்டு வந்திருக்கும் திருத்தத்தில், 'மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே, இனி சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்கலாம்' என சொல்லப் பட்டிருக்கிறது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ள நிலையில், தன்னிச்சையாக இதை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவக்க ஒப்புதல் கேட்டு, பல ஆண்டுகளாக கிடப்பில் போட்ட மாநில அரசின் தயவு, இனி வேண்டாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டதோ?
அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன் அறிக்கை: சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துகழிப்பறைகளையும், 1,200 கோடி ரூபாய் செலவில், பராமரிக்கும் பணி மற்றும் கடற்கரைகளை துாய்மைப்படுத்தும் பணியை, தனியார் வசம் ஒப்படைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 430 கோடி ரூபாய் செலவில், கழிப்பறைகள் பராமரிப்பு பணியை, தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தில், முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தற்போது 1,200 கோடி ரூபாய்க்கு, தனியாரிடம் ஒப்படைப்பது கண்டனத்துக்கு உரியது.
ஒப்பந்தத்துல முறைகேடு நடந்தா கண்காணிக்க வேண்டியது மேலிடம்... தனியார் கைக்கு கழிப்பறைகள் சென்றால், சற்று துாய்மையாக பராமரிக்கப்படலாம்ங்கிறது நல்லது தானே!
அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் முனுசாமி: மும்மொழி கொள்கை என்பது ஸ்டாலினுக்குசொந்தமில்லை. அண்ணாதுரை இருமொழி கொள்கை தான் வேண்டுமென்று வாதாடி நேருவிடத்தில் உறுதி பெற்றார்.எப்பொழுது, அவர்கள் விரும்புகின்றனரோ அப்பொழுது ஏற்றுக்கொள்ளலாம் என, இரு மொழிக் கொள்கையை முழுமையாக அன்றைய பிரதமராக இருந்த நேரு ஏற்றுக் கொண்டார்.
உலகின் எந்த மூலையில் உள்ள எந்த மனிதனையும், 'இந்த மொழி தான் நீ படிக்கணும்; இந்த மொழி படிக்க உனக்கு உரிமை இல்லை' என, யாராவது சொல்ல முடியுமா? 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடக்கத் துவங்கும் நாள் வெகு துாரத்தில் இல்லை; எந்தப் பள்ளியிலும், எல்லா மொழியையும் கற்கும் விதமான அமைப்பு வரும் நாளும் வெகு துாரத்தில் இல்லை. இப்போது நடப்பதெல்லாம் வெறும், 'ஜுஜுபி' டிராமா!