PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேச்சு:
கடந்த சில ஆண்டுகளாக, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில், சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லாத இந்த நெருக்கடி மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக, சட்டத்தின் முன், 14வது பிரிவு சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளித்த போதிலும் அரசியலமைப்பு ரீதியான இட ஒதுக்கீடுகள் நடைமுறைப்படுத்தப்படாத ஒரே அமைப்பாக, நீதித்துறை உள்ளது.
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு:
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'எல்லை நிர்ணயம் விகிதாச்சார அடிப்படையில் செய்யப்படும்' என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இதுவரை கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களும், தென் மாநிலங்களிலிருந்து தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையை தான் தெரிவிக்கின்றன. எனவே தான் இப்போதே தெளிவு தேவை என்ற கோரிக்கையை தென் மாநிலங்கள் முன் வைக்கின்றன.
'எத்தனை இடர் வந்தாலும், பிரச்னையே இல்லை' என்பதுதான், இவங்க கட்சியின் தாரக மந்திரமாச்சே... ஏன் இவ்வளவு கூப்பாடு?
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையது பேட்டி:
மகளிரை மகாலட்சுமியாகப் பார்க்கும் தமிழகத்தில், பெண்களை தொடர்ந்து கேவலப்படுத்துகிறார் சீமான். கட்சியின் பெயரை, நாம் தமிழர் என வைத்துக்கொண்டு தமிழ் பெண்களையும், கலாசாரத்தையும் சீர்குலைக்கும் வகையில், சீமான் பேசுவது கண்டிக்கத்தக்கது. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை, தென்னங்கீற்றால் ஓலை பின்னி அதில் அமர வைத்து பாதுகாக்கும் தமிழ் பண்பாட்டினை கேவலப்படுத்தி பேசிய சீமானை கண்டித்து, அதே தென்னங்கீற்றால் தயாரிக்கப்பட்ட துடைப்பக்கட்டையால் அடிக்க, மகளிர் காங்கிரசார் தயாராக உள்ளனர்.
மாநிலத்தில், ஏகப்பட்ட பலாத் கார சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தட்டிக் கேட்காமல், தமிழ் பண்பாடு குறித்து இவங்க பேசுறது ஆச்சரியமா தான் இருக்கு!
தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் அறிக்கை:
'நீட்' அச்சம்காரணமாக, திண்டிவனம் அருகேமாணவி தற்கொலை செய்துள்ளார், நீட்டை நீக்குவதாகக் கூறி ஏமாற்று நாடகம் நடத்தியவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என, அன்புமணி கூறியுள்ளார். நீட் தேவை மத்திய அரசு விலக்கும் வரை, சரஸ்வதி ராமதாஸ் கல்வி அறக்கட்டளை வாயிலாக, நீட் பயிற்சியை திண்டிவனத்தில் உள்ள மாணவ - மாணவியருக்கு ஏன் அன்புமணி கொடுக்கவில்லை? இலவச சேவை செய்ய மனம் இல்லையோ?
அதானே! இப்படி, 'பின்பாயின்டட்' ஆக யாராவது கேள்வி கேட்டால் தானே, அடுத்த சப்ஜெக்டுக்கு தாவி, அரசியல் விஷயங்களை திசைதிருப்ப முடியும்! பா.ம.க., இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்!