PUBLISHED ON : ஜன 15, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழகம் முழுதும், 1,900
பள்ளி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில்கின்றனர். வெளியூர்,
வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு
குடும்பத்துடன் செல்வது வழக்கம். வரும், 19ம் தேதி சென்னையில் நடக்கும்,
'கேலோ' விளையாட்டு போட்டிகளில், பார்வையாளர் களாக மாணவர்கள் இருக்க
வேண்டும் என்பதால், விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பொங்கல்
விடுமுறை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
பொங்கல் முடிந்து, நான்கு நாட்கள் கழிச்சி தானே போட்டி நடக்குது... விடுமுறை கொடுத்தா தான் என்ன?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு, தரை துடைக்க உதவும், 'மாப்' குச்சியை, 'குளுக்கோஸ் ஸ்டாண்ட்' ஆக பயன்படுத்திய போட்டோ, சுகாதார துறை அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை என, அடுத்தடுத்து புகார்கள் எழுந்த போதும், நடவடிக்கை எடுக்கப்படாததே, தொடர் சீர்கேடுகளுக்கு காரணம்.
'தமிழக சுகாதார துறை நாட்டிலேயே நம்பர் ஒன்'னுன்னு சொல்வாங்களே... அந்த துறை லட்சணம் இப்படி சந்தி சிரிக்குதே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: மோடி வேண்டுமா, வேண்டாமா என்ற வினாவுக்கு விடை சொல்லும் தேர்தலில், பழனிசாமிக்கு தங்கள் ஓட்டை, தமிழக மக்கள் வீணடிக்க மாட்டர்.
இது தெரிந்தாலும், அவர் தரும் பணத்தால் கோடீஸ்வரராகலாம் என ஒரு, 'குரூப்' கிளம்பி இருக்கிறது. இன்னொரு பக்கம், 'உன்னை வேட்பாளராக்குகிறேன். தலைமை தரும் பிஸ்கட்டில், ஆளுக்கு பாதி' என்பதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, மாவட்ட பண்ணையார்கள், 'செட்டப்' மாப்பிள்ளைகளை ஏற்பாடு செய்து வருகின்றனராம்.
இதெல்லாம் காலங்காலமாய் நடக்கறது தானே... இப்ப என்னமோ புதுசா கண்டுபிடிச்சிட்ட மாதிரி சொல்றாரே!
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கடந்த, 2022ல் மதுரையில், தென் மண்டல தொழில் மாநாடு நடந்தது. அதில், '600 கோடி ரூபாயில் மதுரையில், 'டைடல் பூங்கா' அமைக்கப்படும். இதன் வாயிலாக, 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
என்னங்க இது கொடுமை... அறிவிச்சி ஒரு வருஷத்துலயே, உடனே வேலை நடக்கணும்னு எதிர்பார்த்தா எப்படி?