/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எதிர்க்கட்சி பிரமுகருடன் தொழில் செய்யும் அதிகாரி!
/
எதிர்க்கட்சி பிரமுகருடன் தொழில் செய்யும் அதிகாரி!
எதிர்க்கட்சி பிரமுகருடன் தொழில் செய்யும் அதிகாரி!
எதிர்க்கட்சி பிரமுகருடன் தொழில் செய்யும் அதிகாரி!
PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை பருகியபடியே, “ஆதரவாளர்களும் விலகிட்டாங்க...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார்அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவங்களை சேர்க்கணும்னு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து, ஈரோடு மேற்கு மாவட்ட செயலர் மற்றும் அமைப்பு செயலர் பதவிகளை, பழனிசாமி பறிச்சிட்டாரே...
“இந்த சூழல்ல, செங்கோட்டையன் எம்.எல்.ஏ.,வா இருக்கும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில், சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமணத்துக்கு பழனிசாமி வந்தாரு... இவர் வர்றார்னு தெரிஞ்சதும், செங் கோட்டையன் முதல் நாளே சென்னைக்கு போயிட்டாருங்க...
“பழனிசாமியை வரவேற்று கட்சியினர் வச்சிருந்த பேனர்கள்ல, எம்.ஜி.ஆர்., - ஜெ., படங்களை சின்னதா போட்டு, பழனிசாமி படத்தை பெருசா போட்டிருந்தாங்க... தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் செங்கோட்டையன் பெயர், படத்தை யாருமே போடல... அவரது தீவிர ஆதரவாளர்களா இருந்த பலரும்கூட, செங்கோட்டையன் படம், பெயரை தவிர்த்துட்டாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“தி.மு.க., நிர்வாகி அடாவடியை கேளுங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆவின் பூத் வச்சுக்க தனியாருக்கு ஏற்கனவே அனுமதி குடுத்திருக்காவ... இங்க சூடான ஆவின் பால், காபி மற்றும் நொறுக்கு தீனிகள் விற்பனை நடக்கு வே...
“தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஆவின் நிர்வாகத்தின் அனுமதி இல்லாம, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் உறவினரான தி.மு.க., ஒன்றிய நிர்வாகி, தனியா ஒரு பூத்தை துவங்கிட்டாரு... இது சம்பந்தமா, பாதிக்கப்பட்ட தனியார் தரப்பு, வழக்கு போட்டுச்சு வே...
“இதுல, 'இந்த பூத்தை உடனே அகற்றணும்'னு கோர்ட் உத்தரவு போட்டும், கலெக்டரும், மருத்துவ கல்லுாரி முதல்வரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல... இதனால, தி.மு.க., நிர்வாகி, கலெக்டர் மற்றும் கல்லுாரி முதல்வர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தனியார் தரப்பு முடிவு பண்ணியிருக்கு வே...” என்றார், அண்ணாச்சி.
“ஜெயபால், இப்படி உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, “எதிர்க்கட்சி புள்ளியுடன் கைகோர்த்திருக்கார் ஓய்...” என்றார்.
“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.
“செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வீராபுரம் ஊராட்சியில், 'மகேந்திரா வேர்ல்டு சிட்டி' இருக்கோல்லியோ... இங்க நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கறதால, வீட்டுமனைகளின் விலை தாறுமாறா ஏறிடுத்து ஓய்...
“இதுக்கு பக்கத்து ஊராட்சியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான், 'தல'யா இருக்காரு... இவர், 23 சென்ட் பரப்புல, மூன்று தளங்கள்ல அடுக்குமாடி வீடுகளை கட்டறார் ஓய்...
“இதுல, 7 சென்ட் தான் பட்டா நிலம்... மீதம், 16 சென்ட் கிராம நத்தம் நிலம்... அ.தி.மு.க., புள்ளிக்கு, செங்கல்பட்டு தாலுகா அதிகாரி நெருங்கிய நண்பரா இருக்கார் ஓய்...
“அந்த அதிகாரி, ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் பகுதிகள்ல ரியல் எஸ்டேட் தொழில் பண்ணி, நன்னா சம்பாதிச்சார்... இப்ப, அ.தி.மு.க., புள்ளியுடன் சேர்ந்து, அடுக்குமாடி வீடுகள் கட்டிண்டு இருக்கார் ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
“தேவராஜ் வாரும்... உம்ம சேக்காளி ஆறுமுகம் வரலையா வே...” என, நண்பரிடம் விசாரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

