PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில்
பங்கு என்பது தற்போதைய சூழ்நிலையில் எல்லா கட்சி தலைவர்களும், தொண்டர்களும்
விரும்புவது தான். வரும், 2026 சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து
போட்டியிடும் நிலை ஏற்படும்.
ஓஹோ... அந்த ஆசையில் தான் அ.தி.மு.க.,வை கழற்றிவிட்டு பா.ஜ.,வோடு ஐக்கியமானாரோ?
அனைத்து மக்கள் அரசியல்கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: பெண் என்பதால் தான், அன்னபூர்ணாஉணவக உரிமையாளர் கேள்வி கேட்டார் என்று வானதி கூறிய கருத்து சரியல்ல. பெண்கள் தாயுள்ளம் கொண்டவர்கள். நம் தொழில் சிக்கலை கூறலாம் என, எண்ணி இருப்பார். இது பெண்களை மதிக்கும் பண்பு. இதற்கெல்லாம் பெண் என்று பேச துவங்கினால், அதிகாரத்திற்கு வர பெண்கள் தகுதியற்றவர்களாக பார்க்கப்படுவர்.
போற்றுதலுக்குரியபெண்மையை சுயநலமாக, தங்கள் வசதிக்காக பயன்படுத்துவோருக்கு புரியுற மாதிரி சொன்னதுக்கு சபாஷ்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கடந்த, 2016க்கு பின் தி.மு.க., தன் தடுமாற்றங்களில் இருந்து, தன்னை திடமாக கட்டமைத்து, 2021ல் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை பறிகொடுத்த அ.தி.மு.க., கட்சியை தொடர் பிளவுக்கு ஆளாக்கி, அதன் இடத்தை தமதாக்கிக் கொள்ள பா.ஜ.,வும், - த.வெ.க.,வும் குறி வைக்கின்றன. அ.தி.மு.க., - தி.மு.க., என்ற நிலை தொடருமா; தி.மு.க.,வுக்கு புதிய போட்டியாளரை காலம் கை காட்டப் போகிறதா என்ற கேள்விக்கான விடை, அ.தி.மு.க., ஒன்றுபடுமாஎன்ற இன்னொரு கேள்விக்குள் தான் அடங்கி இருக்கிறது.
இப்போதைக்கு எந்த அரசியல் கேள்வி எழுந்தாலும், அ.தி.மு.க., இல்லாமல் பதில் இல்லைன்னு சொல்றாரா?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: பணியின் போது உயிரிழந்த போலீஸ் உதவி கமிஷனர் குடும்பத்துக்கு,25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதையும், அறநிலையத்துறையில், 111 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்பட்டதையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில், கொரோனாவில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு, அரசு வேலை தர, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் அரசு கருணை காட்டவில்லை. அரசு மருத்துவர்கள் மீது, தி.மு.க., அரசு தொடர்ந்து வெறுப்பை காட்டுவது ஏன்?
அரசு டாக்டர்கள் பெரிய ஓட்டு வங்கி இல்லைன்னு ஆட்சியாளர்கள் நினைக்கிறாங்களோ?

