PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

தமிழக காங்., துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் அறிக்கை: பிற்படுத்தப்பட்ட
சமுதாயத்தின் தலைவர்களில் ஒருவர் ராமசாமி படையாச்சி. சென்னையில் அவரது
சிலை, 25 ஆண்டுகளாக இருக்கிறது. கடலுாரில் உள்ள மணிமண்டபம், திண்டிவனம்
தைலாபுரம் தோட்டம் அருகில் உள்ளது. அங்கெல்லாம் ஒரு நாளும் செல்லாத
பா.ம.க., தலைவர் அன்புமணி, ராமசாமி படையாச்சி பிறந்த நாளன்று, அவரது
சிலைக்கு அதிசயமாக வந்து மரியாதை செலுத்தினார். இதற்கு, முதல்வர் ஸ்டாலின்
மரியாதை செலுத்த வந்தது தான் முக்கிய காரணம்.
வன்னியர் சமுதாய ஓட்டுகளை வளைப்பதில் இருவருக்கும் பயங்கர போட்டியே நடக்குதுன்னு சொல்லுங்க!
தமிழக முதல்வர் ஸ்டாலின்அறிக்கை: பா.ஜ., தலைவர்ஒருவர், 'ராகுலின்பாட்டிக்கு நேர்ந்த கதி தான்,அவருக்கும் நேரும்'என்றும், ஷிண்டே சிவசேனாவின் எம்.எல்.ஏ., ஒருவர், 'ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு பரிசு' என்றும் மிரட்டல் விடுத்து உள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.ராகுலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும், வன்முறைக்கும் மக்களாட்சியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
'பிரதமர் மோடியை பீஸ் பீஸ் ஆக்கிருவேன்'னு அமைச்சர்அன்பரசன் பேசினாரே... அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
பா.ம.க., தலைவர்அன்புமணி அறிக்கை: விடுமுறைகள், பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்களை இயக்குவதற்காக, தனியார் பஸ்களை பயன்படுத்த அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் முடிவு செய்து உள்ளது. இது, அரசுபோக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியாகும்; இதை அனுமதிக்கவே முடியாது.
தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கிறவங்க, தனியார் பஸ்கள் மாதிரியே கட்டண கொள்ளையும் அடிக்காம இருந்தா சரிதான்!
'தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்அறிக்கை: தி.மு.க.,வில், அண்ணாதுரை காலத்தில் கட்சிக்காக பாடுபட்டவர்களையும், உழைத்தவர்களையும் எக்காரணத்தைக் கொண்டும் எளிதில் நீக்கி விட மாட்டார்.அவருக்கு பின் வந்தவர்கள், தங்களின் சுயநலத்திற்காக, குடும்ப அதிகாரத்திற்காக, தங்கள் புகழுக்காக, கட்சி அமைப்பை அபகரித்து கொண்டனர்.
கருணாநிதி, ஸ்டாலின் காலத்து தி.மு.க.,வில் பதவிகளை அனுபவித்து விட்டு, அவங்களையே குறை சொல்றாரே!