PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி:
தமிழகத்தில்,
இதற்கு முன் பல நடிகர்கள் துவங்கிய கட்சிகள் என்ன ஆனது என்பது அனைவருக்கும்
தெரியும். நடிகர் விஜய், நேரடியாக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல
நினைக்கிறார். அவரது கட்சி மாநாட்டிற்கு பந்தக்கால் நடும்
நிகழ்ச்சிக்குக்கூட வராமல், நேரடியாக முதல்வராகி, அரியணைக்கு வர
நினைத்தால், தமிழக மக்கள் தேர்தலில் பதில் அளிப்பர். அரசியல் கட்சி
தலைவர்களாகி, நாட்டை ஆளநினைக்கும் நடிகர்கள், முதலில் மக்கள் பிரச்னைகளில்
தலையிட்டு சேவையாற்ற வேண்டும்.
விஜய் போன்ற பிரபலங்கள்
தொட்டதுக்கெல்லாம் நேரா வரணும்னா, அவரை பார்க்க கூடும்
கூட்டத்தையும்,நெரிசலையும் போலீசாரால் சமாளிக்க முடியுமா?
புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி: பருவ மழைகாலம் துவங்கி விட்டது. மதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில்,முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. துணை முதல்வர்உதயநிதி, 'வார் ரூமில்' இருந்து வேலை செய்வதற்கு பதிலாக, களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
களத்தில் ஓடியாடணும்னு தானே அவரை துணைமுதல்வராக்கி இருக்காங்க... இந்த மழைக்கு தெரிஞ்சிடும், அவரது களப்பணி!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் மழைக்காலசிறப்பு மருத்துவ முகாம்கள், 1,000 இடங்களில் நடக்கின்றன.
மழை முடியுற வரைக்குமாவது கொஞ்சம் மக்களை பாருங்க... யாராவது மாரத்தான் ஓட கூப்பிட்டா போயிடாதீங்க!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'எப்போது வேண்டுமானாலும் தி.மு.க.,கூட்டணி உடையும் என்றபேச்சு அடிபடுகிறதே?' என்றகேள்விக்கு, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், 'ஆமாம்; உண்மைதான். 2026 தேர்தலுக்கு இப்போதே கைகட்டி, வாய்பொத்தி நிற்க முடியுமா?' என, கேட்கிறார். 'தேர்தலின்போது தான், தி.மு.க.,விடம் கோடிக்கணக்கில் பணம் வாங்க முடியும்; அது வரை யாரையாவது மிரட்டி, உருட்டிதானே அரசியல்பிழைப்பை நடத்த முடியும்' என்கிறார். என்ன பிழைப்போ இது?
தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுத்து, திருமாவளவன் இவங்களை விட கூடுதலாக, 'சீட்' வாங்கிடப் போறாருன்னு தோழர்கள் இப்பவே சுதாரிக்கிறாங்களோ?