PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் பேட்டி: என்.எல்.சி.,
நிறுவனத்திற்கு, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மக்கள் வழங்கினர். அந்நிறுவனம்
லாபகரமாக இயங்கி வருகிறது. ஆனால், ஏழை மக்களை கனிவுடன் பார்க்காமல்
உள்ளது.மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போனதற்கு என்.எல்.சி.,தான்
காரணம். தற்போது, 340 பேருக்கு என்.எல்.சி., வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிட்டுஉள்ளது. இதில், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அப்பாடா... தேர்தல்ல ஜெயிச்சு, அஞ்சு மாசத்துக்குப் பிறகு, இப்பதான் தொகுதி ஞாபகம் வந்தது போலும்!
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: இரு ஆண்டுகளில், 229 தொகுதிகளில் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன். 2022 அக்டோபரில், துணை முதல்வர்உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுப்பணி இது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பள்ளிகளின் நிலை; கட்டடங்களின்தேவை குறித்து முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.
போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணிகளுக்கு, ஆய்வுக்கே ரெண்டு வருஷம் எடுத்துக்கிட்டா உருப்பட்ட மாதிரிதான்!
இந்திய கம்யூ., கட்சியின்,அகில இந்திய பொதுச்செயலர் ராஜா பேட்டி: ஹரியானா மாநிலத்தில், பா.ஜ.,எப்படியோ ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. ஆனால்,மஹாராஷ்டிராவில் பா.ஜ., தோல்வி உறுதியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில மக்கள் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிக்க உள்ளனர். இம்முறை பா.ஜ., வெற்றி பெறுவது அவ்வளவு சுலபம்அல்ல.
ஒவ்வொரு தேர்தலுக்கும் இப்படித்தான் சொல்றீங்க... ஆனால், மக்கள் முடிவு வேற மாதிரி அல்லவா இருக்கு!
மார்க்சிஸ்ட் கம்யூ., தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி: போக்குவரத்து துறையில், ஓய்வு பெற்றவர்களின் பஞ்சப்படியை வழங்காமல், முந்தைய அரசும், தற்போதைய அரசும் இழுத்தடிக்கின்றன. தற்போது பணியில் உள்ள, 1.25 லட்சம் ஊழியர்களிடம் கூட்டுறவு சங்க பணம், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உட்பட பிடித்தம் செய்த, 15,000 கோடி ரூபாயை தி.மு.க., அரசு செலவு செய்து விட்டது. இதை எதிர்த்து போராடினால், 'கம்யூ.,க்கள் போராடுகின்றனர்' என, கூறுகின்றனர்.
தி.மு.க., அரசு, 15,000 கோடி ரூபாயை செலவு செய்ற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தது ஏன்?