PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
'தி.மு.க., 
ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. கட்டணமும், வரிகளும் 
உயர்த்தப்பட்டுள்ளன. போதை பொருட்கள் நடமாட்டம்அதிகரித்து விட்டது. 
மதுக்கடைகளை மூட வேண்டும். இவற்றால் பொதுமக்கள் பெரிதும் 
பாதிக்கப்படுகின்றனர்' என்கிறார் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன். அதே 
சமயம் தி.மு.க., மீது தங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை என்றும் 
சொல்கிறார். இப்படி பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலைப்பாட்டை 
திருமாவால் எப்படி எடுக்க முடிகிறது.
ராஜதந்திர அரசியல்ல அவர் நல்லாவே தேறிட்டு வர்றாருங்கிறது இவருக்கு தெரியலை போலும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழக பல்கலைகள், கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு தேசிய அளவில் நடத்தி வருகிறது. மாநில அளவில் இத்தேர்வை, யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலைகள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றன. அத்தேர்வை நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க இருப்பதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தகுதி தேர்வை நடத்துவதற்கான எந்த திறனும், கட்டமைப்பும் இல்லாத ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், இப்பொறுப்பு ஒப்படைக்கப்படுவது அபத்தம்.
தகுதியான பேராசிரியர்கள் தேர்வாகி வந்துட கூடாதுன்னு நினைக்கிறாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 
தமிழக ஆட்சிக்கு ஒரு கண்காணிப்பு கேமராவாக அண்ணாமலை உள்ளார். பழி சொல்லிவிட்டு கடந்து போகாமல், தீர்வுக்கான வழியையும் சொல்கிறார். இதற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு மறுஆய்வு செய்ய, அவர் முன்னெடுத்தமுயற்சிகளே சாட்சி. மொத்தத்தில் பழனிசாமியின் எதிர்க்கட்சி தலைவர் கடமையை, அண்ணாமலை தான் மேற்கொள்கிறார்.
விட்டா, தமிழகத்தின் முதல்வராகவே அண்ணாமலை தான் இருக்கார்னு சொல்வார் போலிருக்கே!
மறைந்த முன்னாள் முதல்வர்ஜெ.,யின் தோழி சசிகலா பேட்டி: 
பணி செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதி திட்டத்தை, 2013ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்தார். அதை, 'தோழி' என பெயர் மாற்றி புதிய திட்டமாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.
ஆட்சி மாறினால் காட்சிகள் மாறுவதும், திட்டங்களுக்கு பெயர் மாறுவதும் வாடிக்கை தானே!

