PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு 100வது பிறந்த நாளை முன்னிட்டு,
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்தி, நல்லகண்ணு பெயர்
சூட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும்,
100 மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்களை இருமடங்கு எண்ணிக்கையில்
நியமித்திருந்தால், இன்னும் பேசும்படியாக இருந்திருக்கும்.
காலியிடங்களையே நிரப்ப மாட்டேங்கிறாங்க... இதுல இரண்டு மடங்கு பணியாளர்கள் கேட்பது எல்லாம் பேராசை!
அ.தி.மு.க., தென்சென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆதிராஜாராம் பேட்டி: புகழ்பெற்ற அண்ணா பல்கலையில், தி.மு.க.,வை சேர்ந்தவர் பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார். பதிலளிக்க வேண்டிய அமைச்சரோ, பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார். பொள்ளாச்சியில், விரும்பி சென்ற மாணவியை துஷ்பிரயோகம் செய்தனர்; இங்கு, மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
'அண்ணா விட்ருங் கண்ணா'ன்னு அப்பாவி பெண்கள் கதறிய பொள்ளாச்சி வீடியோவை இவர் பார்க்கலையோ?
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: 'பாலியல் வழக்கில் கைதானவர் தி.மு.க., பிரமுகர் இல்லை' என்றும், 'அமைச்சருடன் படம் எடுத்தால் நாங்கள் பொறுப்பா' என்றும் ஒரு அமைச்சர் கேட்கிறார். மற்றொரு அமைச்சரோ, 'துணை முதல்வருக்கு சால்வை போடுவோர் எல்லாம் தி.மு.க.,வினர் அல்ல' என, பூசி மெழுகுகிறார். அமைச்சர்கள் அருகில் நின்று பொதுமக்கள் போட்டோ எடுத்தால் தள்ளி விடுகிறீர்கள். அதேபோல் தள்ளி விட்டிருக்கலாமே... அவரிடம் சால்வை வாங்கி விட்டு, மக்களுக்கு குல்லா போடுவது தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை.
பாலியல் வழக்கு குற்றவாளிகள் இல்லாத கட்சி ஏதாவது ஒன்றை சொல்லுங்க பார்ப்போம்!
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி: ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் நோக்கோடு லோக்சபாவில் மசோதா விவாதிக்கப்பட்டுள்ளது. லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து நல்லது தான். உழைப்பு, காலம், செலவு, நிர்வாக சுமைகள் என, பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த முறையால் தீர்வு கிடைக்கும்.
உண்மை தான்... ஆனால், நம்மூர் அரசியல்வாதிகளின் பார்வை வேறு மாதிரி இருக்கே!

