PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி:
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.
போலீசார் சுதந்திரமாக செயல்பட்டனர். கட்சி தலையீடு இருந்தால்
சம்பந்தப்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால்,
தி.மு.க., ஆட்சியில் தலையீடு அதிகமாக உள்ளது. சட்டம் - ஒழுங்கு
கேலிக்கூத்தாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியின்போது நடிகர் சூர்யா
போன்ற சமூக ஆர்வலர்கள் அதிகம் இருந்தனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அண்ணாபல்கலை வளாகத்துக்குள் நடந்த பாலியல் கொடுஞ்செயல் குறித்த தமிழக காவல் துறை விசாரணை மீது மக்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது. தங்கள் மீது படிகிற களங்கத்தையும், தமிழக காவல் துறை மாண்பின் மீது ஏற்பட்டுள்ள ஐயத்தையும் துடைத்தெறிய,மிக நேர்மையான விசாரணையை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்ட முதல்வர் உறுதியேற்க வேண்டும்.
வெறும் வாயை மென்ற எதிர்க்கட்சிகளுக்கு அவல் மாதிரி, அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் சிக்கிடுச்சு... முதல்வர், இந்த விஷயத்தை கவனமாகவே கையாளணும்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'அண்ணா பல்கலைவிவகாரத்தில், நடவடிக்கை எடுத்த பிறகு, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி என்ன பயன்?' என, கனிமொழி கூறியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன், 'வருமுன் காப்போம்' என்றீர்கள்.ஆட்சிக்கு வந்த பிறகு,'வந்தபின் பார்ப்போம்' என்கிறீர்கள். அதற்குதான் இந்த போராட்டம்.
உங்களை, 'ஆக்டிவ்'வாகவே வச்சிருக்காங்களே... அதுக்கு பாராட்டு தெரிவிக்கலாமே!
அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன் அறிக்கை: சென்னை, விருகம்பாக்கத்தில் அனுமதியில்லாத இடத்தில்ஒட்டப்பட்ட முதல்வர் போஸ்டர் மீது, மூதாட்டி ஒருவர் செருப்பு வீசிய காட்சிகளை பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி, பொதுமக்கள்மீது தாங்க முடியாத சுமையைஏற்படுத்திய, முதல்வருக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும்?
பாராட்டு விழா நடத்த வேணாம்... அதுக்காக, முதல்வர் படம் மீது செருப்பு வீசியதை நியாயப்படுத்தலாமா?

