PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை: இயற்கை பேரிடர்கள்,
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காதது போன்ற பல
காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில்,
காட்டுப்பன்றிகள் அட்டூழியம், விவசாயத்தையே முழுதுமாக அழிக்கும் நிலையை
ஏற்படுத்தி விடுகிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி, விவசாயி களின்
வேதனைகளை தீர்க்க, உரிய சட்ட முன்வரைவை, இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே
நிறைவேற்ற வேண்டும்.
அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளை
வழக்கு போட்டு கட்டுப்படுத்துறாங்க... காட்டுப்பன்றிகளை எப்படி
கட்டுப்படுத்த போறாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'திராவிட நல் திருநாடும்' எனும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை, அவரவர் விருப்பத்துக்கு திருத்தியும், மாற்றியும் பாடலாம் என்றால், ரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதத்தில் உள்ள, 'திராவிட உத்கல வங்கா' என்பதையும் திருத்தி, மாற்றி பாடலாமா? அப்படி அவரவர் மாற்றி பாடுவதற்கு, அவை என்ன நேயர் விருப்பமா?
இவர் சொல்ற மாதிரி, தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் நேயர் விருப்பம் போல தான் அரசியல்வாதிகள் மாத்திட்டு வர்றாங்க!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில், கருப்பு துப்பட்டா அணிந்து வந்த பெண்களை தடுத்து, துப்பட்டாவை எடுக்க வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. கருப்பு கொடியாக அதை காட்டி விடுவர் என்ற அச்சம் இருந்தால், கருப்பு துப்பட்டாவுக்கு மாற்றாக, வேறு புதிய துப்பட்டாவை கொடுத்திருக்க வேண்டும்.
இனி, முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வெளியே தனியா துப்பட்டா கடையே போடணும் போலிருக்கு!
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் அறிக்கை: கல்வி என்பது பொது பட்டியலில் இருந்தாலும், தொடர்ந்து மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலை மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள், துணைவேந்தர்கள் நியமனத்தில், மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாக பறித்து, கவர்னரிடம் ஒப்படைப்பதாக உள்ளது.
வரைவு விதிமுறைகளை வெளியிடுவதே, கவர்னர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க தானே!

