PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி:
தீப்பெட்டி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில்
பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.,ஆட்சிக் காலத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள்
நலவாரியம் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படாமல்
இருந்திருந்தால், அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நல
வாரியத்தில் இணைத்திருப்போம். ஆனால், தி.மு.க., அரசு அதை
செய்யவில்லை.
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு போதை கலாசாரம் பெருகியதே காரணம். தமிழகத்தில் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் இலக்கு வைத்து மது விற்பனை நடக்கிறது. இதனால், ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர். இன்றைக்கு 10 சதவீதம் விதவைகள் அதிகரித்து விட்டனர்.
இதே குற்றச்சாட்டை தான், கடந்த அ.தி.மு.க., ஆட்சி மீது கனிமொழி சுமத்தினாங்க, தெரியுமா?
துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: அண்ணாதுரைக்கு பின், யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது, 'தமிழ் மக்கள் வளர்ச்சி அடைய கருணாநிதி தான் முதல்வராக வேண்டும்' என, காயிதே மில்லத் வலியுறுத்தினார். காயிதே மில்லத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தபோது பார்க்கச் சென்ற கருணாநிதி கையை பிடித்துக்கொண்டு, 'நான் என் மக்களை உங்களிடம் ஒப்படைத்து செல்கிறேன்' என, கூறிவிட்டு சென்றார். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப, இன்று வரை முஸ்லிம்களுக்கு அரணாக தி.மு.க., உள்ளது.
இவங்க சொல்றது உண்மையாகவே இருக்கலாம்... ஆனா, அதை உறுதிப்படுத்த இப்ப காயிதே மில்லத்தும் இல்லை; கருணாநிதியும் இல்லை!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்த சம்பவம் வெளியில் வந்தவுடன் அவசரமாக, 'அந்த வழக்கில் கைதான ஞானசேகரன், தி.மு.க.,வை சேர்ந்தவர் இல்லை' என, சட்ட அமைச்சர் கூறுகிறார். ஆனால், தி.மு.க.,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியோ, 'அவர் கட்சிக்காரர்' என்கிறார்.
'ஞானசேகரன் தி.மு.க., அனுதாபி'ன்னு ரெண்டுக்கும் நடுவுல ஒண்ணை சொல்லி, முதல்வர் கதையை முடிச்சுட்டாரே!

