PUBLISHED ON : ஜன 26, 2025 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி:
கள்ளச்சாராய
மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய தமிழக அரசு,
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜெகபர்அலியை
கொலை செய்த சம்பவத்தில், இதுவரை நிவாரணம் வழங்க வில்லை. இந்த சம்பவத்திற்கு
முதல்வரும், அமைச்சர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை. 'இந்த கனிமவள கொள்ளை
சம்பவத்தில் இவர்களுக்கு சம்பந்தம் உள்ளதா' என, பொதுமக்கள் கேள்வி
கேட்கின்றனர்.
'மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி'ன்னு சொல்றது, இந்த வழக்குக்கும் பொருந்துமோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
'மதுரை மாவட்டத்தில், டங்ஸ்டன் திட்டம் அமல்படுத்தப்படாது' என, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு, விவசாயிகள் நலன் சார்ந்த, தமிழகத்தின் நலன் சார்ந்த அரசு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அப்படியே, தமிழக திட்டங்களுக்கு நிலுவை வைத்திருக்கும் நிதியையும் விடுவித்து, இன்னும் அழுத்தமாக நிரூபிக்கச் சொல்லுங்களேன்!
மா.கம்யூ., மதுரை எம்.பி., வெங்கடேசன் அறிக்கை: 'கொல்லனின் சூடான உலையில் பழுக்க இரும்பை காய்ச்சும் போது, தண்ணீரை தெளித்து குளிர வைத்தது போல, உன் இனிய சொற்கள், வலி நிறைந்த என் நெஞ்சிற்கு ஆறுதல் அளித்தன' என்கிறது அகநானுாறு. 'கோமியத்தை குடியுங்கள்' என பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில், 'எங்கள் தொழில்நுட்பத்தின் தொன்மையை பாருங்கள். இரும்பின் காலத்தை பாருங்கள்' என, உலகிற்கு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு, எம் பெருமையின் மகுடம்.
அந்த பெருமையை பேசுறதுல கூட அரசியலை கலக்கணுமா என்ன?
தமிழக காங்., பொதுச்செயலர் வசந்தராஜ் அறிக்கை:
சமூக நீதியை கடைப்பிடித்து வருகிறது தி.மு.க., அரசு. அதே சமயம் மதுரை, திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீட்டில் அமர்ந்து ஒரு எம்.பி.,யின் ஆதரவாளர்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். 'ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என, எம்.ஜி.ஆர்., பாடிய பாட்டை நிறைவேற்ற வேண்டிய கடமை, முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அநாகரிக செயலை கூட்டணி கட்சி செய்திருந்தாலும் அதை கண்டிக்க வேண்டும்.
இப்படி எல்லாம் நீங்க பேசினால், உங்க தலைவர் செல்வப்பெருந்தகை, முதலில் உங்களை தான் கண்டிப்பார்!