PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 'ஜாதிவாரி
கணக்கெடுப்பை, மத்திய அரசுதான் நடத்த வேண்டும். மாநில அரசுக்கு அந்த
அதிகாரம் இல்லை' என, பொறுப்பை தட்டிக்கழித்த தி.மு.க., அரசு,
சட்டசபையில் சபாநாயகர் படித்த கவர்னர் உரையில், ஜாதிவாரி
கணக்கெடுப்பை நடத்த, மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: வேங்கைவயல் விவகாரத்தில், மூவர் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கு இப்படி முடிக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை கிராம மக்களும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. தங்கள் மீது பழி சுமத்தப்பட்டதைக் கண்டித்து, மீண்டும் போராடத் துவங்கியுள்ளனர். இவ்வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.
கிராம மக்கள் மட்டுமில்லை, தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகளே இதை ஏத்துக்கலையே... இதுல இருந்தே, 'எதையோ மறைக்க' ஆளுங்கட்சி முயற்சிப்பது அப்பட்டமா தெரியுதே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில், தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை, 2029ல் நடத்த வேண்டும். வரும் 2026ல் தமிழக சட்டசபை பதவிக்காலம் முடிந்ததும், மூன்றாண்டுகளை கவர்னர் ஆட்சிக்காலமாக பிரகடனம் செய்து, பூரண மதுவிலக்கு, போதை ஒழிப்பு, கனிமவள சுரண்டலுக்கு முடிவுரை எழுத வேண்டும்.
பன்னீர்செல்வம் முதல்வராக முடியாத மாநிலத்துல, வேற யாரும் முதல்வராகிட கூடாது என்ற இவரது, 'நல்லெண்ணம்' நல்லாவே தெரியுது!
ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்' என, திருமாவளவன் கூறி இருக்கிறார். சி.பி.ஐ., விசாரித்தால், 'தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இல்லையா' என்பதும், தமிழக காவல் துறை விசாரித்தால், 'சி.பி.ஐ.,க்கு மாற்றுங்கள்' என்பதும் ஏதோ உண்மையை மறைக்க, திருமா வளவன் நடத்தும் நாடகம் போல் தெரிகிறது.
அது வழக்குகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்... இதே, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் திருமாவளவன் சி.பி.ஐ., விசாரணை கேட்கலையே!

