PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி:
தமிழகத்தில், 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை
விதிக்கப்பட்டது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக
போராடி வருகிறோம். கள் மதுவும் அல்ல; மதுவுக்கு மாற்றும் அல்ல. வரும்
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, கள் தடை நியாயமானது தான்
எனக்
கூறி, தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா? இது எங்களின் சவால்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பட்டியில் ஆட்களை அடைத்து, பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து, போராடிப் பெற வேண்டிய இடைத்தேர்தல் வெற்றியை, இடையூறுகள் இல்லாமல் எளிதாக்கி, ஆளுங்கட்சிக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்திருக்கிறது, அ.தி.மு.க., என்ற புறக்கணிப்பு கட்சி. ஆம்... எம்.ஜி.ஆர்., - நம்பியார் மோதலாக இருந்திருக்க வேண்டிய களம், இப்போது நம்பியார் - நாகேஷ் குஸ்தியாக உள்ளது.
இடைத்தேர்தல் முடிந்து பொதுத் தேர்தல் வர்ற வரைக்கும் இவர் அ.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பை விட மாட்டார் போலிருக்கே!
தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தமிழகத்தில் ஒரு தலித் முதல்வராக வேண்டும் என, கவர்னர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தன் சமுதாயத்தில் தன்னைத் தவிர, வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வெளிவந்த வார்த்தைகள் தான் அவை.
தலித் முதல்வராகணும்னு தன்னைத்தான் கவர்னர் சொல்லி இருக்கார்னு திருமாவளவன் பெருமை பேசாம, புலம்பி தவிக்கலாமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: சுவிட்சர்லாந்து நாட்டின், 'டாவோஸ்' நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று, முதலீடு எதையும் ஈர்க்காமல், வெறுங்கையோடு திரும்பி வந்த தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 'டாவோஸ் நகரில் புள்ளி வைத்துவிட்டு வந்திருக்கிறோம்' என, தங்கள் இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்புள்ளியை வைத்து, எப்போது கோலம் போடப்படும் என்பதே நம் மக்களின் எதிர்பார்ப்பு.
வழக்கம் போல, 'பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வரும்'னு, 'அளந்து விடாம' இந்த முறையாவது உண்மையை சொன்னதுக்கு அவரை பாராட்டுங்க!