PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: தமிழகத்தில்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இட ஒதுக்கீட்டை எடுத்துக்
கொடுக்க வேண்டும். நீங்கள் எண்ணிக் கொடுக்கிறீர்கள். இடப்பகிர்வு
செய்ய வேண்டும். பீஹார், தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு
நடத்தினர். உங்களால் ஏன் முடியவில்லை? ஜாதிவாரி கணக்கெடுப்பு
நடத்த நடுக்கம் வரக் காரணம் என்ன?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ராமலிங்கம் பேச்சு: ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு முன்பே தமிழ் வளர்க்கப்பட்டது. தேசியத்தையும், தெய்வீகத்தையும், திராவிடம் என்ற போர்வை கொண்டு மறைக்க பார்த்தால், திராவிடப் போர்வை தான் எரிந்து போகும். நெருப்புக்கனல் அணையாது. யாராலும் அணைக்கவும் முடியாது. முதல்வர் எடுத்துள்ள இதுபோன்ற ஆயுதங்கள், 2026 தேர்தலில் பலிக்காது.
இதுவரை நடந்த தேர்தல்களில் அந்த ஆயுதம்தானே அவங்களுக்கு கைகொடுத்தது... 2026ம் ஆண்டும் கைகொடுக்கும்னு நம்புறாங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: மத்திய அரசின் பட்ஜெட்டில், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து, தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது. மத்திய பட்ஜெட், பீஹாருக்கான பட்ஜெட்டே தவிர, தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வோடு கூட்டணி வச்சு ஜெயிச்சு, ஆட்சிக்கு நீங்களும் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தா பீஹார் மாதிரி, தமிழகத்திற்கும் அள்ளித் தந்திருப்பாங்களோ?
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி: தமிழக ஊரக வளர்ச்சித் துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்திற்கு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 9 லட்சம் பேருக்கு தினமும் வேலை கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை.
நிதி கொடுத்தால் மட்டும் மத்திய அரசை பாராட்டவா போறீங்கன்னு, ஒட்டுமொத்தமா புறக்கணிச்சுட்டாங்களோ?