PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
'இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்கும்
உரிமையை பெற்றுத்தர வேண்டும்' என்பதுதான், தமிழக மீனவர்களின்
ஒட்டுமொத்த கோரிக்கை. இது நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின்
பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இலங்கை கடற்படையினரால் கைது
செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை
விடுவிப்பதோடு, பறிமுதல் செய்த படகுகளையும் திரும்ப ஒப்படைக்க
வேண்டும்.
தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத் தலைவர் இந்திரா பேட்டி: சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி திட்டத்தை, செவிலியர்கள் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்ய கூறி வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. மொபைல் ரீசார்ஜ் செய்வதற்குக் கூட கட்டணம் வழங்கப்படுவதில்லை.
இப்பதான் எல்லாரும், 'அன்லிமிடெட் பிளானுக்கு ரீசார்ஜ்' பண்றாங்களே... அந்த கணக்குல உங்களை சேர்த்துட்டாங்களோ என்னமோ?
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் பேட்டி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 309வது வாக்குறுதியில், 'ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்' என, கூறியுள்ளது. தற்போது, இதற்கு அரசு ஒரு குழு அமைத்திருப்பது வாக்குறுதிக்கு முரணாக உள்ளது. இந்த குழுவை ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிராகரிக்கிறது.
ஆகாத வேலைகளுக்கு தான் குழு அமைத்து காலம் கடத்துவாங்க என்பதை புரிஞ்சுக்கிட்டாரு போல தெரியுது!
தமிழக பா.ஜ., மூத்த தலைவரான, நடிகர் சரத்குமார் பேட்டி: கடந்த சில தினங்களாக, பாலியல் வன்கொடுமை, அத்துமீறல் குற்றங்கள் தமிழகத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பிரச்னைகளை வைத்துக்கொண்டு, 'தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்' என, முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருவது வேடிக்கையாக இருக்கிறது.
சரி விடுங்க... தமிழகத்தில் தாமரை மலர்ந்ததும், சட்டம் - ஒழுங்கை சரி பண்ணிடலாம்!

