PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேட்டி: தமிழகத்தில் இதுவரை காங்., – தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்திற்கு தடை விதித்ததில்லை. ஆனால், இன்று ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் விஜய், ஹிட்லரை போல செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஹிட்லர் ஆட்சியில் தான் எதையுமே சொல்ல முடியாது. அதுபோல, தமிழகத்தின் விலைவாசி நிலவரத்தை ஒரு பேராசிரியர் கூறியதற்காக, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சிகள் குறித்து, சமூக வலைதளங்கள்ல விமர்சனம் செய்த பலரை கைது பண்ணிய உதாரணங்கள் ஏகப்பட்டவை இருக்கே... அவற்றை எல்லாம் பட்டியல் போட்டா பக்கங்கள் பத்தாது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் அ.ம.மு.க., போட்டியிடாது. அது, இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் நியாயமானது.
உங்க கருத்தை பார்த்தால், ‘அம்பாசமுத்திரம் தொகுதியை நம்ம கட்சிக்கு தள்ளி விட்டுருவாங்களோ’ன்னு பயப் படுற மாதிரி தெரியுதே!
ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேச்சு: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியால் தான், தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய், கேரளாவில் காங்., கட்சியின் சதீசன் ஆகியோர் முதல்வர்களாகி உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியால் ஓட்டுரிமை இழந்தவர்களை அழைத்து வந்தால், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 1,000 ரூபாய் பரிசு வழங்குவேன். உண்மையான ஓட்டு திருடர் அவர் தான்; மூன்று மாநிலங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளார்.
ராஜ் சினிமாவுல தான் வில்லனா நடிச்சாருன்னு பார்த்தா, ஜனநாயகத்துக்கும் பெரிய வில்லனா இருக்காரே!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி:
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, த.வெ.க.,வினர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழி போட்டு கொண்டிருக்கின்றனர். அன்பில் மகேஷ் வீடுகளில் சோதனை செய்து ஆவணங்களை கண்டுபிடித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை கூறினாலும், அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டும். எந்த பைலை வேண்டுமானாலும் முதல்வர் விஜய் திறக்கட்டும்; நீதிமன்றம் தான் கடைசி. நீதிமன்றத்தில் நாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிப்போம். பொய்யான வழக்குகளை சுமத்தி வருவதற்காக, த.வெ.க.,வினர் மீது நாங்கள் வழக்கு தொடர உள்ளோம்.
- ‘தி.மு.க.,வினர் விஞ்ஞானபூர்வமா ஊழல் செய்வாங்க’ன்னு எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவாங்க... அந்த வகையில், ‘எங்க முறை கே டுகளை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியாது’ன்னு சவால் விடுறீங்களோ?
