PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

கரப்பான் பூச்சி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே பேட்டி:
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில், நாங்கள் போட்டியிடப் போவதில்லை; எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயல்பட மாட்டோம். தேர்தல்கள், இளைஞர்களின் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு நடக்க வேண்டும். ஜாதி, மதத்தின் பெயரால் இன்னும் எவ்வளவு காலம், நாம் தேர்தல்களை சந்திக்கப் போகிறோம்?
உ.பி., அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளை சமாளிக்க முடியாது என்பதால், 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்'னு ஒதுங்குவது நல்லாவே தெரியுது!
பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில், 1.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 'ஹெராயின், மெத் ஆம் பெட்டமைன்' போன்ற போதைப் பொருட்களையும், கடத்தல் தங்கத்தையும், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்யும் ஐந்தாவது நிகழ்வு இது. தமிழகத்தில் காவல் துறை, கலால் துறை, சி.பி.சி.ஐ.டி., போன்ற அமைப்புகள் எதற்கு இருக்கின்றன என்றே தெரியாத ஒரு நிலை உள்ளது.
இத்தனை அமைப்புகளையும் மீறி தங்கம், போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழையுது என்றால், பக்கத்து மாநிலங்கள்லயும் நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்!
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி பேச்சு:
துபாயில் நான் பணிபுரிந்தபோது, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு அனுப்ப வேண்டியிருந்தது. எல்லா நாட்களும் சாப்பிட்டால் பணம் அனுப்ப முடியாது என்பதால், காலையில் டீ, மதியம் ஜூஸ் மட்டுமே சாப்பிடுவேன். மாலையில் அங்கிருக்கும் கோவிலுக்கு சென்றால், 'பிரட், சென்னா' கொடுப்பர். வெள்ளிக்கிழமை குருத்வாராவில் தயிர் சாதம், சாம்பார் சாதம் கொடுப்பர்; இதற்காகவே கோவிலுக்கு போவேன்.
உங்க கஷ்டங்களை மறக்காம இருப்பது தெரியுது... இப்ப, கோடி கோடி ரூபாயா சம்பாதிக்கிற நீங்க, உங்களை மாதிரி சிரமப்படுறவங்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாமே!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை:
தமிழக அணைகளின் தண்ணீர் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 82.78 சதவீதம் இருந்த நீர் இருப்பு, இன்று வெறும் 36.28 சதவீதமாகக் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 90 அணைகளில், 39ல் கால்வாசிக்கும் குறைவான தண்ணீரே உள்ளதால், மழையை மட்டும் நம்பி வாழும் நிலைக்கு இன்று நம் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
- 'எல் நினோ' பாதிப்பால் ஏற்பட்ட விளைவு இது... அணைகளில் தண்ணீர் குறைஞ்சதுக்கும் த.வெ.க., அரசு தான் காரணம்னு பழியை துாக்கி போட்டுறாதீங்க!
