PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷுக்கு வக்காலத்து வாங்கிய அத்தனை பேரும், ‘அக்மார்க்’ மனசாட்சியே இல்லாதவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டனர்.
எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக பேசி, குற்றத்தை திசை திருப்பிய அத்தனை பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அப்படி பார்த்தால், காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் மீது தான் முதல்ல வழக்குப்பதிவு செய்யணும்!
அ.தி.மு.க., அமைப்புச் செயலர் ராயபுரம் மனோ அறிக்கை: ‘த.வெ.க., ஆட்சியில் தமிழக பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்’ எனக்கூறி, சிங்கப்பெண் பாதுகாப்பு படையை முதல்வர் விஜய் உருவாக்கினார்.
ஆனால், அந்த படையால், ஒரு கலெக்டருக்கே பாதுகாப்பு தர முடியவில்லை. தற்போது, கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எடுத்த சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி.
இந்த விஷயத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,வை, அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளிடுச் சுன்னு தான் சொல்லணும்!
பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் முருகன் பேட்டி: தமிழகத்தில் சட்டம் –- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. போதைப் பொருள் மற்றும் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், தினமும் கொலை, கொள்ளைகள் நடந்து வருகின்றன. தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் வித்தியாசம் இல்லை; இரண்டும் ஒன்று தான்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் த.வெ.க., அரசின் நடவடிக்கை, தி.மு.க.,வுக்கும், அந்த கட்சிக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அப்பட்டமாக்கிடுச்சே!
பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது, ஹிந்து உணர்வுகளை புண்படுத்தவும், ஓட்டு வங்கி அரசியலை காக்கவும் செய்த அரசியல் நோக்கமுள்ள திட்டமிட்ட சதி. முந்தைய தி.மு.க.,வின் அதே ஹிந்து விரோத அணுகுமுறையை த.வெ.க., அரசும் தொடர்கிறது. அரசியலமைப்புக்கும், கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கைக்கும் மேல், தன் அரசியல் ஆதாயத்தை மட்டுமே த.வெ.க., பார்க்கிறது. இந்த சட்ட விதிமீறல் விவகாரத்தில் தொடர்புள்ள அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் மீது, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் தப்பிச்சிடுவாங்க... நீதிமன்றத்தில், ‘குட்டும், திட்டும்’ வாங்கப் போறது என்னமோ அதிகாரிகள் தான்!
