PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

ஊட்டச்சத்து நிபுணரும், சமூக செயற்பாட்டாளருமான மாயா மோகன் பேச்சு: குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் அவசியம். தமிழக அரசு பள்ளிகளில், மதிய உணவு திட்டத்தின் கீழ், வாரம் ஒரு நாள், ‘சிக்கன்’ பிரியாணி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், குழந்தைகளின் உணவில் புரதச்சத்தை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இருப்பினும், சிக்கன் மட்டுமே குழந்தைகளின் ஊட்டச்சத்துகளை முழுமையாக பூர்த்தி செய்யாது. பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்கள் போன்ற சத்தான உணவுகளும் சமச்சீரான உணவில் இடம் பெறும் வகையில், ஊட்டச்சத்து உணவு திட்டத்தை அரசு மேம்படுத்த வேண்டும்.
சிக்கன் சாப்பிடாத குழந் தைகளின் ஆரோக்கியத் தையும் அரசு கவனத்தில் எடுத்துக்கணும்!
த.மா.கா., வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் பேச்சு: மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்படும் த.வெ.க., அரசின் நல்ல முயற்சிகளை, த.மா.கா., தலைவர் வாசன் வரவேற்பார்; அதே நேரத்தில் மக்களின் கோரிக்கைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பார். அதனால் தான், அனைத்து தரப்பு மக்களும் நேசிக்கக்கூடிய தலைவராக வாசன் திகழ்கிறார்.
அப்படி மக்கள் ஆதரவு இருக்கும் உங்க தலைவர், ஏன் எந்த தேர்தல்லயும் போட்டியிட மாட்டேங்கிறார்?
காங்., மாணவர் அணி தமிழக தலைவர் சின்னதம்பி அறிக்கை: தி.மு.க., தலைமை, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூரை புல்லுருவி, அட்டைப்பூச்சி என விமர்சித்து, தன் கடந்த கால தோல்விகளை மறைக்க முயல்கிறது. முதுகெலும்பு இல்லாத கட்சியான தி.மு.க., கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி, இப் போது அவர்களை திட்டிப் பேசுவது தான் துரோகம்.
அவங்களா கூட்டணி மாறினா அது, ‘ராஜதந்திரம்’னும், அதையே மத்தவங்க செய்தா, ‘துரோகம்’னு திட்டுவதும் தி.மு.க.,வுக்கு வாடிக்கை தானே!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல் எம்.பி., அறிக்கை:
தமிழகத்தின் புதிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக விளங்குவார் என, நம்புகிறேன். அந்த பாலத்தின் வழியே தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும். தமிழ் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை காக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தி, அமைப்புகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் பதவிக்காலமாக அமைய வேண்டும் என, தமிழகம் எதிர்நோக்குகிறது.
- அது இருக்கட்டும்... நீங்க ராஜ்யசபா எம்.பி.,யாகி, கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகப் போகுதே... தமிழக மக்கள் எதிர்பார்ப்புகள் எதையாவது பூர்த்தி செய்திருக்கீங்களா?
